தரிசு நிலங்களிலும், வரப்பு ஓரங்களிலும் சத்தமில்லாமல் வளர்ந்து கிடக்கும் சோற்றுக் கற்றாழை, இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளின் தோற்காத மாற்றுப் பயிராக உருவெடுத்துள்ளது. ‘நலம் தரும் நற்குமரி’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகை, வெறும் மருத்துவச் செடியாக மட்டும் பார்க்கப்படாமல், நிலையான வருமானம் ஈட்டித் தரும் ஒரு பிரம்மாண்டமான தொழில் வாய்ப்பாக மாறியுள்ளது. மிகக் குறைந்த நீர்ப்பாசனம், வறட்சியைத் தாங்கும் திறன் மற்றும் அதிக பராமரிப்பு தேவையில்லாத தன்மை ஆகியவற்றுடன், மண்ணின் காரத்தன்மையை குறைத்து நிலத்தின் தரத்தை மேம்படுத்தும் இயற்கை நண்பனாகவும் கற்றாழை திகழ்கிறது.
கற்றாழை சாகுபடியில் கிடைக்கும் லாபத்தை விட, அதை ‘மதிப்புக் கூட்டுப் பொருட்களாக’ மாற்றும் போது கிடைக்கும் வருமானம் பல மடங்கு அதிகம். கற்றாழை இலைகள் மற்றும் சாறுகளை மூலப்பொருட்களாக கொண்டு சோப்பு, ஷாம்பு, முடி பராமரிப்பு எண்ணெய் மற்றும் தோல் பாதுகாப்பு திரவங்கள் என பல்வேறு அழகுசாதன பொருட்களை தயாரிக்க முடியும்.
அதுமட்டுமின்றி, ஆரோக்கிய உணவுச் சந்தையில் கற்றாழை ரசம், சூப், டீ முதல் அல்வா, கேக் மற்றும் மைசூர்பாக் போன்ற சத்தான உணவுப் பொருட்களாகவும் இது புது அவதாரம் எடுத்துள்ளது. இயற்கை மற்றும் நஞ்சில்லா வாழ்வியலை தேடும் இன்றைய தலைமுறையினரிடையே இத்தகைய தயாரிப்புகளுக்குச் சந்தையில் பெரும் வரவேற்பு உள்ளது.
இல்லத்தரசிகள், சுயதொழில் புரிய விரும்பும் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் எனப் பலருக்கும் ஏற்ற எளிமையான தொழிலாக இது அமைந்துள்ளது. ஏக்கர் கணக்கில் பயிரிட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஒருபுறமிருக்க, வீட்டுத் தோட்டம் அல்லது மாடித் தோட்டங்களில் வளர்த்தும் உள்ளூர் சந்தைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை வழங்க முடியும்.
MSME போன்ற அரசு அமைப்புகள் மூலம் வேதிப்பொருட்கள் கலக்காமல் கற்றாழைப் பொருட்களை வீட்டிலேயே தயாரிப்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. சரியான பயிற்சியும் முறையான சந்தைப்படுத்தலும் இருந்தால், சாலையோர செடியாக நாம் கடந்து செல்லும் கற்றாழை, பலரது வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.



