உலகெங்கிலும் உள்ள பாரம்பரிய உணவுகளை தரவரிசைப்படுத்துவதில் பெயர் பெற்ற உலகளாவிய உணவு மற்றும் பயண வழிகாட்டியான டேஸ்ட்அட்லஸ், உலகளவில் சிறந்த 20 கோழி உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பல இந்திய விருப்பமானவை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
அதில் உலகின் சிறந்த 20 சிக்கன் உணவுகளில் பட்டியலில் இந்தியாவின் பட்டர் சிக்கனுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. இது பட்டர் சிக்கன் ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டர் சிக்கன் மட்டுமின்றி இந்த லிஸ்டில் இன்னொரு இந்திய உணவுக்கும் இடம் கிடைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் துருக்கியின் பிலிக் டோப்காபி (Piliç Topkapi) உள்ளது. அரிசி, கீரை மற்றும் நட்ஸ்களை சிக்கனுக்குள் வைத்துச் செய்யப்படும் ஒரு வகை உணவாகும். மொராக்கோவின் ரிஃபிஸா (Rfissa) இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தையும், தென் கொரியாவின் பிரபலமான க்ரிஸ்பி ஃப்ரெய்ட் சிக்கன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. நான்காவது இடத்தில் பெரு நாட்டை சேர்ந்த போலோ எ லா பிராசா இருக்கிறது. அதைத் தொடர்ந்தே 5வது இடத்தில் பட்டர் சிக்கன் வருகிறது. லேசான மசாலா மற்றும் க்ரீமியான சுவையுடன் தயாரிக்கப்படும் பட்டர் சிக்கனுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இந்திய உணவாகப் பட்டர் சிக்கன் மாறியுள்ளது.
இந்த லிஸ்டில் இன்னொரு இந்திய உணவுக்கும் இடம் கிடைத்துள்ளது. டேஸ்ட்அட்லஸ் பட்டியலில் தந்தூரி சிக்கன் 14வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகிலேயே மிகவும் பழமையான சிக்கன் உணவுகளில் ஒன்றாக தந்தூரி சிக்கன் கருதப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்தே இந்த உணவுக்கான தொல்பொருள் சான்றுகள் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.



