ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் உருவாக்க விரும்புகிறார்கள். அதற்காக, குழந்தை பிறந்தவுடன் பலர் சேமிப்புத் திட்டங்கள் குறித்து ஆராயத் தொடங்குகிறார்கள். சிலர் தங்கள் குழந்தையின் பெயரில் PPF அல்லது சுகன்யா சம்ருத்தி யோஜனா போன்ற திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்; சிலர் நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit) வழியாக பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.
ஆனால், அதிக பாதுகாப்பு மற்றும் நிலையான வருமானம் வேண்டுமென நினைப்போருக்கு தபால் நிலைய நிரந்தர வைப்பு திட்டம் (Post Office Time Deposit Scheme) சிறந்த தேர்வாக மாறியுள்ளது. இது அரசு உத்தரவாதம் வழங்கும் பாதுகாப்பான முதலீட்டு திட்டம் என்பதால், பெற்றோர்கள் இதை விரும்பி தேர்வு செய்கிறார்கள்.
தபால் நிலைய நிரந்தர வைப்பு திட்டம் வங்கியின் FD திட்டம் போலவே இயங்குகிறது. இதில் முதலீடு செய்த தொகைக்கு ஆண்டுதோறும் சேர்க்கப்பட்ட வட்டி (Compound Interest) வழங்கப்படுகிறது. இதனால், உங்கள் முதலீடு வருடாவருடம் வேகமாக வளர்ச்சி அடையும்.
ரூ.5 லட்சம் எப்படி ரூ.15 லட்சமாக மாறும்?
முதல் கட்டம்: நீங்கள் ரூ.5,00,000 ஐ தபால் நிலைய நிரந்தர வைப்பு நிதியில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், தபால் நிலையம் தற்போது வழங்கும் வட்டி விகிதம் 7.5% ஆகும். 5 ஆண்டுகள் முடிவில், வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு கிடைக்கும் தொகை சுமார் ரூ.7,24,974 ஆகும்.
இரண்டாம் கட்டம்: இந்த ரூ.7,24,974 ஐ மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதே திட்டத்தில் புதுப்பிக்கவும். இதன் முடிவில், தொகை சுமார் ரூ.10 லட்சம் ஆகும்.
மூன்றாம் கட்டம்: இந்த ரூ.10 லட்சத்தையும் மீண்டும் மூன்றாவது முறை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யுங்கள். இதன் முடிவில், உங்கள் முதலீடு ரூ.15 லட்சத்திற்கு மேல் வளர்ந்திருக்கும். அதாவது, மொத்தம் 15 ஆண்டுகளில், நீங்கள் ஆரம்பத்தில் முதலீடு செய்த ரூ.5 லட்சம், மூன்று மடங்கு ஆகி,ரூ.15 லட்சத்திற்கும் மேல் கிடைக்கும். இதில் வட்டி வருமானம் மட்டும் சுமார் ரூ.10,24,149 ஆகும்.
முதலீட்டின் முதிர்வு தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் தொகையை எடுக்கலாம். ஆனால், உடனே எடுக்காமல், அதை புதுப்பித்து தொடர்வது அதிக வருமானத்தை அளிக்கும்.வங்கிகளைப் போலவே, தபால் நிலையங்களிலும் வேறு கால அளவுகளும் வட்டி விகிதங்களும் உள்ளன.