மைக்ரோ பிளாஸ்டிக் என்பது பெரிய பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து உடைந்து வெளியேறும் மிகச் சிறிய துகள்கள். இவை இன்று நம் உணவு, வீட்டுப் பயன்பாட்டு பொருட்கள், சுற்றுச்சூழல் என அனைத்திலும் பரவி விட்டன. இந்த துகள்கள் மனித உடலில் தேங்குவதால் இதய நோய், ஸ்ட்ரோக், எலும்பு பலவீனம், கருவுறுதல் குறைபாடு, நுரையீரல் புற்றுநோய் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தப் பிரச்சனைக்கு ஒரு முக்கிய தீர்வாக ஜப்பானின் RIKEN Center for Emergent Matter Science நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதிய வகை பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த பிளாஸ்டிக், மிகுந்த வலிமை உடையது, மிகவும் நெகிழ்வானது, முழுமையாக உயிரியல் முறையில் அழியும் (biodegradable) தன்மை கொண்டது
இந்த புதிய பிளாஸ்டிக், தாவரங்களில் இருந்து பெறப்படும் செல்லுலோஸ் (cellulose) எனும் இயற்கை மூலப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. செல்லுலோஸ் என்பது பூமியில் மிக அதிகமாக காணப்படும் கரிம சேர்மம் ஆகும்.
பாதுகாப்பான மூலப்பொருட்கள்
இந்த பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட அனைத்து கூறுகளும் FDA அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான பொருட்கள் ஆகும். குறிப்பாக மரத்திலிருந்து பெறப்படும் உயிரியல் அழியும் பப்புல் (wood pulp) பயன்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய ரகசியம் – Choline Chloride
இந்த பிளாஸ்டிக் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கு வகித்த பொருள் Choline Chloride என்ற உப்பு வகை. இது பொதுவாக உணவுப் பாதுகாப்பு பொருளாகப் பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனம். இந்த ரசாயனத்தின் அளவை மாற்றுவதன் மூலம் பிளாஸ்டிக்கின் தன்மையை விஞ்ஞானிகள் கட்டுப்படுத்த முடிந்தது:
கண்ணாடிபோல் கடினமாக மாற்றலாம்
130% வரை இழுக்கக் கூடிய அளவுக்கு நெகிழ்வாக மாற்றலாம், வெறும் 0.07 மில்லிமீட்டர் தடிப்பாகவும் உருவாக்க முடியும், இந்த மாற்றங்கள் பிளாஸ்டிக்கின் வலிமையை அதிகரித்து, அதே நேரத்தில் நீரில் எளிதாக கரையும் வகையில் அழியும் தன்மையை உறுதி செய்கின்றன.
இந்த புதிய பிளாஸ்டிக் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கினால், சுற்றுச்சூழலில் பரவும் மைக்ரோ பிளாஸ்டிக் பிரச்சனைக்கு பெரிய தீர்வாக அமையும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மனித உடல்நலத்துக்கும், பூமியின் பாதுகாப்பிற்கும் இது ஒரு மிக முக்கியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆராய்ச்சியை ஜப்பானில் உள்ள RIKEN மையத்தின் பாலிமர் வேதியியலாளர் டகூசோ ஈடா தலைமையில் மேற்கொண்டனர். இந்த ஆய்வு சமீபத்தில் அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி என்ற புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, இப்படிப் பட்ட தாவர அடிப்படையிலான வலிமையான பிளாஸ்டிக் உருவாக்குவது ஒரு யோசனை மட்டத்தில்தான் இருந்தது. ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, அந்த யோசனை நடைமுறை சாத்தியமான நிலையில் இருப்பதை நிரூபித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய பிளாஸ்டிக், பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட வழக்கமான பிளாஸ்டிக்கிற்கு சமமான வலிமையைக் கொண்டது. அதே நேரத்தில், தேவைக்கேற்ப இதன் தன்மைகளை மாற்றி அமைக்கவும் முடியும் – கடினமாகவும், மிகவும் நெகிழ்வாகவும், மெல்லிய தகடாகவும் தயாரிக்க முடியும்.
மைக்ரோபிளாஸ்டிக் சூழலிலும் மனித உடலிலும் நீண்ட காலமாக அழியாமல் இருந்து பெரும் சுகாதார அபாயங்களை உருவாக்கி வரும் நிலையில், இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனால் இந்த பாதுகாப்பான மற்றும் முழுமையாக சிதையும் பிளாஸ்டிக்கைக் கூடிய விரைவில் சந்தைக்கு கொண்டு வர ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
Read More : பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? ஆண்களே, இதை மிஸ் பண்ணிடாதீங்க!



