இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ மூலமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தற்போது தவிர்க்க முடியாததாகிவிட்டன. ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், நிதிப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாகவும், திறமையாகவும் மேற்கொள்ளும் வகையில், பிஹிம் (BHIM) செயலியில் பல புதிய வசதிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆன்லைன் பணப் பரிவர்த்தனையின் வருகைக்குப் பிறகு, பலரும் ரொக்கப் பணத்தைக் கையாள்வதைக் குறைத்துவிட்டனர். சிலர், கையில் பணம் இல்லாமலேயே யு.பி.ஐ.யை மட்டுமே நம்பி வெளியே செல்கின்றனர். இதன் காரணமாகப் பணத்தைச் செலவு செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், செலவுகளைக் கண்காணிக்கும் நோக்கத்துடனும், பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்தச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) பீம் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான லலிதா நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “எளிமை மற்றும் புதுமையின் காரணமாகப் பீம் செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. பயனர்களின் நிதி ஒழுங்கை மேம்படுத்தும் வகையில், தற்போது செலவுப் பகுப்பாய்வு வசதி, ஃபேமிலி மோட் வசதி மற்றும் யுபிஐ சர்க்கிள் வசதி போன்ற புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.
குடும்ப செலவுகளை கண்காணிக்கும் ‘ஃபேமிலி மோட்’ :
* ஃபேமிலி மோட் வசதியின் மூலம், குடும்ப உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு அவர்களின் மொத்த மற்றும் தனிப்பட்ட செலவுகளைக் கண்காணிக்க முடியும்.
* இது ஒரு பயனாளரின் மாதச் செலவுகளைத் துல்லியமாகக் கண்காணித்து, அவசியமில்லாத செலவுகளைத் தவிர்ப்பதற்கும், தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வதற்கும் உதவுகிறது.
* அத்துடன், நண்பர்கள், உறவினர்களுடன் வெளியே சென்று சாப்பிடுவது, பொருட்களை வாங்குவது அல்லது வாடகை கொடுப்பது போன்ற சமயங்களில் செலவுகளைப் பிரித்து, நேரடியாகப் பணம் செலுத்தவும் இந்தச் செயலி அனுமதிக்கிறது.
யுபிஐ சர்க்கிள் வசதி :
பயன்பாட்டை எளிதாக்கும் நோக்கில் யுபிஐ சர்க்கிள் (UPI Circle) என்ற புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு முதன்மைப் பயனாளர், அதிகபட்சமாக 5 இரண்டாம் நிலை பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் செலுத்த அங்கீகாரம் அளிக்க முடியும்.
இந்தப் புதிய வசதிகள், டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் பாதுகாப்பானதாகவும், அதே நேரத்தில் பயனர்கள் தங்கள் நிதி நிர்வாகத்தை மேம்படுத்தவும் உதவுவதாகவும் லலிதா நட்ராஜ் தெரிவித்தார். முக அடையாளம் மற்றும் கைரேகையைப் பயன்படுத்தும் புதிய யுபிஐ வசதிகளுக்குப் பிறகு, இந்தப் புதிய அம்சங்கள் பீம் செயலியின் பயன்பாட்டை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : நல்லகண்ணுவுக்கு என்ன ஆச்சு..? மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..!!