நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, நம் அன்றாட வாழ்க்கையில் கற்பனைக்கும் எட்டாத மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வரிசையில், உலகப் புகழ்பெற்ற மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், வீடியோ அழைப்பு அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இனி நீங்கள் வீடியோ காலில் பேசும்போது, உங்கள் பின்னால் இருக்கும் சாதாரண பின்னணிக்கு பதிலாக, உங்கள் கற்பனைக்கு ஏற்றபடி ஒரு மாயாஜால உலகத்தை உருவாக்கலாம்.
இந்த புதிய வசதி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுகிறது. இது வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல, தனிப்பட்ட மற்றும் தொழில்முறைத் தேவைகளுக்கும் பயன்படும் ஒரு புதிய யுக்தி. எனவே, இந்த புதிய அம்சம் பற்றியும், இதனை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வாட்ஸ் அப்பில் நீங்கள் வீடியோ கால் பேசும்போது, உங்கள் பின்னால் இருக்கும் சாதாரண அறையின் காட்சிக்கு பதிலாக, ஒரு பிரம்மாண்டமான விண்வெளி நகரம், அழகான பாலைவனம் என கற்பனைக்கு எட்டாத காட்சிகளை வைத்தால் எப்படி இருக்கும்..? இந்த வசதியைத்தான், வாட்ஸ்அப் தனது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கியுள்ளது. இந்த அம்சம், உலகெங்கிலும் உள்ள குறிப்பிட்ட பயனர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. நீங்கள் ஒரு வீடியோ அழைப்பைத் தொடங்கியதும், ‘கால் எஃபெக்ட்ஸ்’ என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்து, அதில் உள்ள ‘பேக்ரவுண்ட்ஸ்’ (பின்னணிகள்) என்பதற்கு செல்ல வேண்டும். பிறகு, ‘கிரியேட் வித் ஏஐ’ என்பதை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான பின்னணி காட்சியை சில வார்த்தைகளில் டைப் செய்ய வேண்டும்.
உதாரணமாக, enchanted forest at sunset, retro disco lounge என டைப் செய்தால், நீங்கள் விரும்பிய காட்சி உடனடியாக உங்கள் பின்னணியில் தோன்றும். வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், ஒரு தொழில்முறை அறையைப் போல காட்சிப்படுத்தலாம். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள், தங்களுக்கு பிடித்த காபி கடையின் முன் இருப்பது போல் காட்டலாம். இது வணிக ரீதியான சந்திப்புகளுக்கும், தனிப்பட்ட உணர்வுகளை பகிர்ந்துகொள்ளவும் உதவியாக உள்ளது.
மேலும், இந்த AI பின்னணிகள், வாட்ஸ்அப்பின் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் பாதுகாப்பிற்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக இருக்காது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, உங்கள் அழைப்புகள் மற்றும் சாட்கள் முற்றிலும் பாதுகாப்பானவை. பின்னணியில் உள்ள காட்சி மட்டுமே மாறும், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
Read More : தவெகவில் இணையப்போகும் மெகா கூட்டணி..!! கலக்கத்தில் திமுக, அதிமுக தலைமை..!! செம குஷியில் விஜய்..!!