உலக அளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழும் அமேசான், தற்போது சுமார் 30,000 கார்ப்பரேட் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி, ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செலவுகளைக் குறைக்கும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தப் பணிநீக்க நடவடிக்கை இன்று முதல் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவைகளை வழங்கி வரும் அமேசானில், தற்போது சுமார் 3,50,000 கார்ப்பரேட் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 10 சதவீதம் பேர் பாதிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே, 2022 ஆம் ஆண்டு முதல் 27,000 ஊழியர்கள் நீக்கப்பட்ட நிலையில், இது நிறுவனத்தின் மிக தீவிரமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் இருக்கும் திடுக்கிடும் பின்னணி குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், ஆன்லைன் வர்த்தகத்தின் தேவை திடீரென அதிகரித்ததால், அமேசான் நிறுவனம் தேவைக்கு அதிகமாக பணியாளர்களை நியமித்தது. தற்போது நிலைமை சீரடைந்துள்ள நிலையில், நிறுவனத்தின் செலவுகளைச் சரிக்கட்டவும், நிர்வாக அமைப்பை மறுசீரமைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டிசிஎஸ், காக்னிசண்ட், மைக்ரோசாஃப்ட், மெட்டா போன்ற பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) வருகையால் ஊழியர்களை நீக்கி வரும் நிலையில், அமேசானின் இந்தப் பணிநீக்கமும், தொழில்நுட்பத் துறையில் நீடித்துவரும் வேலைவாய்ப்புக் குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. வேலையை இழந்துவிடுவோமோ என்ற கவலையில் அமேசான் ஊழியர்கள் தற்போது கலக்கமடைந்துள்ளனர்.
Read More : பள்ளி மாணவர்களுக்கு செம குட் நியூஸ்..!! இனி 30 மார்க் எடுத்தாலே பாஸ்..!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!



