அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் முழுவதும் பரவலான தாக்குதல்களை நடத்தியது… ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தளங்கள் குறிவைக்கப்பட்டதுடன், பல போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பிறகு, இந்த இராணுவ நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
இந்த தாக்குதல்களால் நாடு முழுவதும் பல இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், தலைநகர் தெஹ்ரான் நகரின் மேல் புகை மேகங்கள் எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் அரசு ஊடகங்களின் தகவலின்படி, தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இதுவரை 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் காமெனெய் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் இராணுவத் தலைவர்கள், தங்களின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்கு நிச்சயம் பழிவாங்கப்படும் என வெளிப்படையாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பல நாடுகள் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது; இந்த நிலைமை ஒரு பெரிய போராக மாறக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
ஈரான், துபாய் விமான நிலையம், விமான நிலையம், புர்ஜ் கலிஃபா, பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே, அமெரிக்க இராணுவம், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தலைமையகத்தை அழித்துவிட்டதாக அறிவித்துள்ளது.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். ஆபரேஷன் எபிக் ஃபியூரி (‘Operation Epic Fury) என்ற நடவடிக்கையின் கீழ், “ஒரே தாக்குதலில் 48 உயர்மட்ட ஈரான் தலைவர்கள் கொல்லப்பட்டனர்” என அவர் கூறினார். மேலும், ஈரான் கடற்படையின் 9 போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும், கடற்படை தலைமையகம் பெரும்பாலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மோதலில் இதுவரை 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 5 பேர் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான காயங்களுடன் உள்ள மற்ற வீரர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதுவரை, ஈரானில் உள்ள 131 மாவட்டங்கள் அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும் மனிதாபிமான நடவடிக்கைகள் இடையறாது நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுக்கள் பணியாற்றி வருகின்றன; நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் முழு எச்சரிக்கையுடன் தயார் நிலையில் உள்ளனர்.
தற்போது, சுமார் 40 லட்சம் தன்னார்வலர்கள் மனிதாபிமான சேவைகள், உதவிகள் மற்றும் மனநல ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களில் நாடு முழுவதும் இதுவரை குறைந்தது 555 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஈரான் ரெட் கிரசென்ட் சங்கம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை காலை குவைத்தில் பல அமெரிக்க போர் விமானங்கள் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே குவைத்தில் பல அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது.. “இன்று காலை பல அமெரிக்க போர் விமானங்கள் விபத்துக்குள்ளானன. அனைத்து பணியாளர்களும் உயிர் பிழைத்ததை உறுதிப்படுத்துகிறது,” என்று பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்,
“அதிகாரிகள் உடனடியாக தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர், பணியாளர்களை வெளியேற்றி மருத்துவ மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களின் உடல்நிலை சீராக இருக்கிறது..” என்றும் அவர் தெரிவித்தார்..



