தமிழக அரசியல் களத்தில் அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி உறவு, மீண்டும் ஒருமுறை அனல் பறக்கும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திருச்சி பயணம், இரு கட்சிகளுக்கும் இடையிலான பனிப்போரை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாஜக தலைமைக்கும் இடையே நிலவும் ஈகோ யுத்தம், தொகுதிப் பங்கீடு வரை நீண்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த அமித் ஷாவை, அதிமுகவின் முக்கிய தூணாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று (ஜனவரி 4) திருச்சியில் நேரில் சந்தித்து பேசினார். உண்மையில், இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி தான் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வராதது பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ரகசிய ஆலோசனையில், பாஜக தரப்பில் இருந்து அதிரடியாக 50 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், தொகுதிப் பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக பேச அமித் ஷா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.
இந்த சந்திப்பின் போது, வெறும் தொகுதிப் பங்கீடு மட்டுமின்றி, பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வருவது, பூத் மட்டத்தில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது போன்ற முக்கிய வியூகங்களும் விவாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பாஜக யாத்திரையின் நிறைவு விழாவில் அமித் ஷா ஆற்றிய உரை, அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சியின் மிக முக்கிய தலைவரான எடப்பாடி பழனிசாமியின் பெயரை ஒருமுறை கூட அமித் ஷா தனது உரையில் குறிப்பிடாதது, அரசியல் ரீதியான ஒரு சிக்னலாக பார்க்கப்படுகிறது.
தற்போது நிலவும் மிக முக்கிய முரண்பாடு என்னவென்றால், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா முழங்கி வர, எடப்பாடி பழனிசாமியோ “அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்; அதிகாரத்தில் யாருக்கும் பங்கில்லை” என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். அமித் ஷாவை வரவேற்க கூட எடப்பாடி பழனிசாமி நேரில் செல்லாதது, இந்த விரிசலை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு அமையப்போகும் கூட்டணி கணக்குகளில், இந்த மோதல் என்ன மாதிரியான திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



