காவல்துறையினர் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் கூடுதலாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு புகாரின் பேரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. மேலும் இந்த வழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது..
இந்த நிலையில் அஜித்குமார் மரண வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.. அப்போது வழக்கில் முக்கிய சாட்சிகளுக்கு 2018 ஆம் ஆண்டு சாட்சி பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு இன்னும் வழங்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கண்ட சாட்சிகள் சமர்ப்பித்த சாட்சி பாதுகாப்பு விண்ணப்பங்களை 7 வேலை நாட்களுக்குள் தீர்த்து வைக்க சிவகங்கை முதன்மை மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.
மேலும் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. அஜித்குமார் குடும்பத்திற்கு ஏற்கனவே தமிழக ரூ.7.5 லட்சம் நிதியுதவி வழங்கியது.. இந்த நிலையில் கூடுதலாக ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தில் உரிய இழப்பீடு கோருவதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
காயமடைந்தவர்களுக்கு இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவிடுமாறு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.. ஆனால் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஐ தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்த பின்னரே இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
அவரின் கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த கட்டத்தில் அத்தகைய உத்தரவை பிறப்பிக்க மறுத்துவிட்டனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகலாம் என்றும் நீதிபதிகள் கோரினர். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்..
இதனிடையே அஜித் குமார் மரண வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் 2-வது முறையாக திருப்புவனம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.. இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்..
சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) மோஹித் குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குழு கடந்த வாரம் காவல்நிலைய மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கிய நிலையில், ஆதாரங்களைச் சேகரித்து முக்கிய நபர்களை விசாரித்து வருகிறது.
திருப்புவனம் காவல் நிலையத்திற்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், அவர் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை மற்றும் சம்பவத்தின் போது அவர் கொண்டு செல்லப்பட்ட பிற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது. இந்த வழக்குடன் தொடர்புடைய பல போலீசாரையும் இந்தக் குழு விசாரித்தது. வழக்கில் சாட்சிகளாக அடையாளம் காணப்பட்ட நபர்கள் விரிவான விசாரணைக்காக மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : மருத்துவமனையில் இருந்தே மக்களுடன் பேசிய CM ஸ்டாலின்.. முதல் போட்டோ வெளியானது..