தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார். மாநிலங்களவை எம்.பி. சீட் வழங்குவது தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது தேமுதிகவுக்கு ஒரு எம்பி சீட் ஒதுக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் தெரிவித்ததாகவும், இதுதொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும்பட்சத்தில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் மாநிலங்களவை எம்பி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எம்பி சீட் சுதீஷுக்கு தான் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாம். அதாவது, சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்த எல்.கே.சுதீஷ், “தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தார்கள். அதிமுக அளித்த உத்தரவாதத்தால் தான் நான் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை” என தெரிவித்திருந்தார்.
யார் இந்த எல்.கே.சுதீஷ்..?
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் தம்பி தான் எல்.கே.சுதீஷ். இவர், மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். பின்னர், விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததும் அவருக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டு வந்தார். கடந்த 2005-இல் தென்சென்னை மாவட்ட தலைமைப் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, 2006 சட்டமன்ற தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டார். 2009 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். 2017இல் தேமுதிகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட இவர், 2019ஆம் ஆண்டில் மீண்டும் பாஜக கூட்டணியில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டார். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் தேமுதிகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவைக்கு தேமுதிக சார்பாக செல்ல உள்ளார் LK சுதீஷ்.