உத்தரப்பிரதேச மாநிலம் மோரதாபாத் பகுதியில் விவசாயி சோப்ராமின் மகள் சுவாதி (25). இவரது காதலன் மஞ்சித் (28). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. ஆனால், இதற்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காதலுக்கு எதிராக இருந்த குடும்பத்தினரைப் பொய்யான குற்றச்சாட்டில் சிக்க வைக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, தனது காதலனை ரகசியமாக சந்திக்க, சுவாதி தனது குடும்பத்தினருக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இது அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததால், சுவாதியின் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இதனால், குடும்பத்தை பழிவாங்க துணிந்தனர்.
அதன்படி, சுவாதி மற்றும் மஞ்சித் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ் (30) என்பவரை மது அருந்த அழைத்துச் சென்றுள்ளனர். அந்த மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, யோகேஷ் மயங்கியதும், அவரை ஒரு பெரிய கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு, மஞ்சித் யோகேஷின் செல்போனிலிருந்து, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து, “சுவாதியின் தந்தையும், சகோதரர்களும் தான் என்னைத் தாக்கினர்” என போலியாக புகார் அளித்துள்ளார்.
முதலில் இதை நம்பிய போலீசார், பின்னர் சந்தேகமடைந்து விசாரணை நடத்தினர். மின்னணு ஆதாரங்கள் மூலம், யோகேஷின் குரலில் பேசாதது மஞ்சித்தின் குரல் என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, சுவாதி மற்றும் மஞ்சித் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தக் கொடூரக் கொலையை விரைந்து தீர்த்த போலீஸ் குழுவுக்கு ரூ.25,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சினிமா போல திட்டமிடப்பட்ட இந்தக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



