தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அவ்வப்போது முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் மதுரை முதலீட்டாளர் மாநாட்டில் 91 ஒப்பந்தங்கள், மற்றும் ஜெர்மனி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் பல முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன, இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாக உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் ரூ.718 கோடி முதலீட்டில், 663 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஷ்னைடர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது..
இந்த முதலீடு சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள விரிவாக்கத் திட்டங்கள் (brownfield) மற்றும் ஓசூர் (Hosur) நகரில் ஒரு புதிய பசுமைத் திட்டத்தையும் (greenfield) உள்ளடக்கியது, இது மின்சாதனங்கள் மற்றும் ஆற்றல் மேலாண்மைத் துறைகளில் தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதலீடு, தமிழ்நாட்டின் தொழில் சூழல், விரைவான அனுமதி, திறமையான பணியாளர்கள் மற்றும் சிறந்த கட்டமைப்பு ஆகியவற்றின் மீது ஷ்னைடர் எலக்ட்ரிக் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக அமைந்துள்ளது..



