ரமல்லா நகரில், சாலையோரத்தில் நமாஸ் தொழுகை செய்துகொண்டிருந்த ஒரு பாலஸ்தீனியரை, நான்கு சக்கர வாகனமான ATV மூலம் மோதிவிட்டு திட்டியதாகக் கூறப்படும் இஸ்ரேலிய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அந்த நபர் பாலஸ்தீனியரை வாகனத்தால் மோதி கீழே தள்ளிய பிறகு அவரை அவதூறாகப் பேசி, அந்த இடத்தை விட்டு வெளியேறச் சொல்லி மிரட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவத்துக்குப் பிறகு இஸ்ரேல் இராணுவம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டவர் இஸ்ரேலிய ரிசர்வ் சிப்பாய் என உறுதி செய்யப்பட்டதாகவும், அவர் தனது அதிகார எல்லையை மிகக் கடுமையாக மீறி நடந்துகொண்டதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவரது இராணுவ சேவை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டு, அவரை 5 நாட்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விவகாரத்தில் இஸ்ரேலியகாவல்துறை எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர் எவ்வித உடல் காயங்களின்றி தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தந்தை மஜ்தி அபு மொகோ, அந்த நபரும் பிற குடியேற்றவாதிகளும் சேர்ந்து அந்த கிராமத்தில் சட்டவிரோதமாக ஒரு அவுட்போஸ்ட் அமைத்து, அவ்வப்போது அங்கு வந்து கால்நடைகளை மேய்க்கவும், சாலைகளை அடைத்து கிராம மக்களை தூண்டிவிடவும் செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு மேற்குக் கரையில் குடியேற்றவாதிகளின் தாக்குதல்கள் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,680-க்கும் அதிகமான தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது சராசரியாக ஒரு நாளைக்கு 5 தாக்குதல்கள் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக ஜெனின் மற்றும் டூபாஸ் பகுதிகளில் இந்த தாக்குதல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
ஜனவரி 1 முதல் டிசம்பர் 1 வரை, இஸ்ரேலி படையினர் அல்லது குடியேற்றவாதிகளால் 227 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம், மேற்குக் கரையில் நிலவும் பதற்றத்தையும், பாலஸ்தீனியர்களின் பாதுகாப்பு குறித்த கவலையையும் மீண்டும் உலகளவில் எழுப்பி உள்ளது..
Read More : வங்கதேசத்தில் காண்டகளுக்கு பற்றாக்குறை..! 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பிறப்பு விகிதம் உயர்வு..! என்ன காரணம்?



