சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (25). சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஓரினச்சேர்க்கை செயலியான கிரைண்டர் செயலி மூலம் ராஜேஷ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் நீண்ட நாட்கள் செல்போனில் பேசி வந்த நிலையில் கவுதமை தனியே சந்திக்க ராஜேஷ் அழைத்துள்ளார். அதன்படி நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காலியிடத்தில் இருவரும் சந்தித்து தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென 2 பைக்குகளில் 5 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத கவுதம் அதிர்ச்சி அடைந்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் கவுதமை கையால் தாக்கிய அந்த கும்பல், அவரிடம் இருந்த செல்போனை பறித்து ‘ஜிபே’ மூலம் ரூ.24 ஆயிரத்தை தங்களது வங்கி கணக்கிற்கு அனுப்பிவிட்டு செல்போனை மீண்டும் அவரிடம் கொடுத்துவிட்டு தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கவுதம், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து நந்தம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கவுதமை தனிமையில் சந்திக்க அழைத்த ராஜேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து போரூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 25), அவரது நண்பர்களான மணிகண்டன் (23), வரதராஜ் என்ற சஞ்சய் (24), கோகுல் (22), கணேஷ்குமார் (24), கவுதம் (19) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 செல்போன்கள், 3 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.



