கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தேவரா கொந்தூரத்து பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஜார்ஜ் என்பவர், நேற்று முன்தினம் அதிகாலையில் தன் வீட்டின் சுவரில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்தார். இவருக்கு அருகே கிடந்த ஒரு சாக்கு மூட்டையைக் கண்ட துப்புரவுப் பணியாளர், சந்தேகம் அடைந்து அதைப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே பெண் ஒருவரின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார், தூங்கிக் கொண்டிருந்த ஜார்ஜை எழுப்பி விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். இதனால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவரே அந்தப் பெண்ணைக் கொலை செய்த கொடூரமான உண்மை வெளிவந்தது.
ஜார்ஜ் அளித்த வாக்குமூலத்தில், தனக்குத் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதாகவும், மகன் லண்டனிலும், மகள் பாலாவிலும் வசிப்பதாகவும் தெரிவித்தார். கடந்த 20ஆம் தேதி மனைவியுடன் மகளைப் பார்க்கப் பாலாவுக்குச் சென்ற அவர், மனைவியைப் பிரிய விட்டுவிட்டுத் தனியாக வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வழியில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணை சந்தித்த அவர், அவருடன் உல்லாசமாக இருக்க விரும்பி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இருவரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்த நிலையில், பணம் கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சண்டையில் ஆத்திரமடைந்த ஜார்ஜ், அங்கிருந்த இரும்பு கம்பியால் அந்தப் பெண்ணை தாக்கி கொலை செய்துள்ளார். கொலைக்குப் பிறகு, குற்றத்தை மறைக்கும் முயற்சியில், சடலத்தை அப்புறப்படுத்த முடிவெடுத்தார். அதற்காக, அக்கம் பக்கத்தினரிடம், “நாய் ஒன்று இறந்துவிட்டது, அதன் உடலை வெளியே வீச வேண்டும்” என்று கூறி சாக்கு மூட்டை கேட்டுள்ளார். ஆனால், மூட்டை கிடைக்காததால், தானே கடையில் இருந்து வாங்கி வந்து அந்தப் பெண்ணின் உடலைச் சாக்கு மூட்டையில் கட்டியுள்ளார்.
உடலை வெளியே தூக்கிச் சென்று வீச முயன்றபோது, அவரால் முடியாததால், அங்கேயே போட்டுவிட்டுப் போதையில் தூங்கிவிட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜார்ஜை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் யார், அவரது பின்னணி என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : “திமுகவின் கொள்கையே கொள்ளை அடிப்பது தான்”..!! ஆளுங்கட்சியை அலறவிட்ட TVK தலைவர் விஜய்..!!



