ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர் காலனியை சேர்ந்தவர் களஞ்சியம் (28). மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடலில் தங்கி மீன்பிடித்த களஞ்சியம் நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பினார். அதன் பின்னர் குளிப்பதற்காக மோட்டார் சுவிட்சை ஆன் செய்தார்.
மோட்டார் இயங்காததால் மின் ஒயரை சரி செய்தபோது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்டபத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், களஞ்சியம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடைந்து போய் கதறி அழுதனர். இந்நிலையில் மகன் இருந்த துக்கம் தாங்க முடியாமல் சோகத்தில் வீட்டுக்கு சென்ற சேகர்(55), அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு வந்த குடும்பத்தினர் சேகர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது அவர்களது குடும்பத்தினரை மேலும் மனவேதனை அடைந்தனர்.
தகவல் அறிந்து மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதா பாலு, சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். சேகர், களஞ்சியத்தின் உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



