உலகிலேயே உயரமான சிகரமான எவரெஸ்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக தென் கொரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
எவரெஸ்டுக்கு தெற்கே நேபாளத்தில் அமைந்துள்ள மேரா சிகரத்தின் (Mera Peak) உச்சிக்கு அருகில், பனிப்புயலில் சிக்கி ஒரு தென் கொரிய மலையேற்ற வீரர் உயிரிழந்ததாக நேபாள மலையேற்ற சங்கம் உறுதிப்படுத்தியது. சுமார் 21,250 அடி உயரம் கொண்ட இந்த சிகரத்தின் அருகே வார இறுதியில் இருந்து அவர் காணாமல் போயிருந்த நிலையில், தற்போது அவரது இறப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குச் சரிவுகளில் ஏற்பட்ட கடுமையான பனிப்புயலால், கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 1,000 மலையேற்ற வீரர்கள் சிக்கித் தவித்ததாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவின் ‘தங்க வார’ (Golden Week) விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், இந்த எதிர்பாராத பனிப்பொழிவு மலை வழிகாட்டிகளைக் கூட அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய பனிப்பொழிவு, வார இறுதியில் மேலும் தீவிரமடைந்தது. மீட்கப்பட்டவர்களில் ஒருவரான அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரர் டாங் ஷுச்சாங் அளித்த பேட்டியில், “நான் இதுவரை இப்படிப்பட்ட வானிலையை அனுபவித்ததில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய 20 பேர் கொண்ட குழுவில் பலருக்குக் கடும் குளிரால் ஏற்படும் ஹைப்போதெர்மியா (Hypothermia) அறிகுறிகள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் குழுவைச் சேர்ந்த மற்றொருவரான சென் கெஷுவாங் பேசுகையில், அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து பின்வாங்கி வரத் தொடங்கியபோது பனியின் ஆழம் கிட்டத்தட்ட 3 அடி இருந்ததாகவும், “நாங்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள்.. இருப்பினும் இந்த பனிப்புயலைக் கையாள்வது மிகவும் கடினமாக இருந்தது. நான் வெளியேறியது பெரும் அதிர்ஷ்டம்” என்றும் தெரிவித்துள்ளார்.
சிக்கித் தவித்த மலையேற்ற வீரர்களில் மொத்தம் 580 பேர் பத்திரமாக திபெத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும், கடைசி குழுவில் இருந்த மலையேற்ற வீரர்களையும் மீட்புக் குழுவினர் அடைந்துள்ளனர். அவசரத் தேவைகளுக்கான பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு அவர்கள் அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சீனாவின் மேற்கில் உள்ள கிங்காய் (Qinghai) மாகாணத்தின் மற்றொரு மலைப் பகுதியில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக, ஹைப்போதெர்மியா மற்றும் அதிக உயர நோயால் ஒரு மலையேற்ற வீரர் உயிரிழந்துள்ளார். அங்கே 137 பேர் மீட்கப்பட்டதாகச் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அண்டை நாடான நேபாளத்தில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொடர்ச்சியான இயற்கை சீற்றங்கள், இமயமலைப் பிராந்தியத்தில் மலையேற்றம் மேற்கொள்வோருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
Read More : சென்னை நட்சத்திர ஓட்டலில் அரைகுறை ஆடையுடன் நடனம்..!! போதையில் தள்ளாடிய இசையமைப்பாளர் மகள்..!!