வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான ஆதித்ய தாக்கரே ஆகியோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், இந்தப் பிழைகளை தேர்தல் ஆணையம் சரி செய்ய தவறினால், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனுமதிப்பதா வேண்டாமா என்று எதிர்க்கட்சிகள் இணைந்து முடிவெடுக்க வேண்டியிருக்கும் என உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார்.
“மும்பையை விழுங்க வரும் அனகோண்டா”..!!
யாரையும் நேரடியாக குறிப்பிடாமல், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசிய உத்தவ் தாக்கரே, “இரண்டு வர்த்தகர்கள் மும்பை மீது கண் வைத்துள்ளனர்” என்றார். “நான் இரண்டு செய்திகளைப் படித்தேன். முதல் பக்கத்தில் பாஜக அலுவலக திறப்பு விழா பற்றிய செய்தியும், அடுத்த பக்கத்தில் ஜிஜா மாதா பூங்காவிற்கு அனகோண்டா (ராட்சத பாம்பு) ஒன்று விரைவில் வரப்போகிறது என்ற செய்தியும் இருந்தது. அந்த அனகோண்டா இங்கு வந்து பூமி பூஜை செய்துள்ளது. அது மும்பையையே விழுங்க விரும்புகிறது” என்று அவர் ஆவேசமாக கூறினார்.
மேலும், தனது கட்சி மத்தியில் ஆட்சிக்கு வரும்போது, வாக்காளர் பட்டியலில் பிழை செய்த தேர்தல் ஆணையம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அவர் சூளுரைத்தார்.



