பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கி, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ம.க தலைமை நிர்வாக குழுவில் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன், வடிவேல் ராவணன் உள்ளிட்டவர்கள் தலைமை நிர்வாகிகளாக இடம்பெற்று இருந்தனர். இந்த சூழலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கி, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார்.
21 புதிய தலைமை நிர்வாக குழு நிர்வாகிகளாக, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், கவுரவ தலைவர் ஜி. கே.மணி, பு.தா.அருள்மொழி, கரூர் பாஸ்கரன், ஏ.கே. மூர்த்தி, அருள் எம்.எல்.ஏ., ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகளை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து அறிவித்தார். குறிப்பாக அன்பு மணியால் நீக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைமை நிர்வாக குழு நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். பூம்புகாரில் நடக்கவுள்ள மகளிர் மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ”அன்புமணியை யாரும் விமர்சிக்க வேண்டாம். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்சி பொறுப்பு நிரந்தரமானது. கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துங்கள். வரும் 8ம் தேதி, திண்டிவனம் அருகே உள்ள ஓமந்துாரில், பா.ம.க., செயற்குழு கூட்டம் நடக்கும்,” என்றார்.
Read more: கர்ப்பிணிகள் சிக்கன் சாப்பிட்டால் நல்லது தான்.. ஆனால் இவர்களெல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்..!!