பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாமகவை சேர்ந்த யாரும் அன்புமணியுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது எனவும் ராமதாஸ் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையில் கடந்த சில நாட்களாக கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு, அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, 31ஆம் தேதி வரை பதில் அளிக்க அவகாசம் வழங்கியது. ஆனால் அந்தக் காலக்கெடு முடிந்தும், அன்புமணியின் தரப்பில் பதில் எதுவும் வழங்கவில்லை.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் 4-ந்தேதி தைலாபுரத்தில் பா.ம.க. மாநில நிர்வாக குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. அந்த கூட்டம் முடிந்ததும் ராமதாஸ் கூறுகையில், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு அவர் வருகிற 10-ந் தேதிக்குள் (நேற்று) உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றால், அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி காலக்கெடு நேற்று (செப்டம்பர் 10) முடிவடைந்தது. அன்புமணி எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ராம்தாஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி குடும்பத்தினர் பாமகவிற்குள் தனிக்கட்சி போல் செயல்படுகிறார்கள். தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மூத்த தலைவர்கள் பேசியும் அவர் கேட்கவில்லை. இதனால் பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அன்புமணியுடன் பாமகவை சேர்ந்த யாரும் எவ்வித தொடர்பும் வைக்க கூடாது. மனம் திருந்தி வரும் அன்புமணி ஆதரவாளர்களை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். அன்புமணியுடன் தொடர்பில் இருக்கும் பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.



