பாமகவில் இருந்து அன்புமணியே நீக்குவது குறித்து அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையில் கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி, அடுத்த ஓராண்டு தலைவராக இருப்பதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, 17ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் கூடிய பொதுக்குழுவில், தானே கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் என்றும் அறிவித்தார்.
அப்போது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு, அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, 31ஆம் தேதி வரை பதில் அளிக்க அவகாசம் வழங்கியது. ஆனால் அந்தக் காலக்கெடு முடிந்தும், அன்புமணியின் தரப்பில் பதில் எதுவும் வராததால், செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்புமணியை மீண்டும் சேர்க்க முடியாது என்பதில் ராமதாஸ் உறுதியுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அவரை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானம் எடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இதற்கிடையில், செயல் தலைவர் இடத்தை ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி வகிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாமக மகளிர் மாநாடு மற்றும் பொதுக்குழுவில் ஸ்ரீகாந்தியை மேடையேற்றி ராமதாஸ் பேசுபொருளாக்கியிருந்தார்.
ஆனால் இதனால் கட்சிக்குள் மேலும் பிரிவினை ஏற்படலாம் என்றும், அடுத்த தலைமுறை பாமக அன்புமணியின் பக்கம் சாய்ந்திருப்பதால், அவரின் கைமேலோங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன. இதற்கிடையில், ராமதாஸ் – அன்புமணி விரைவில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பாமக தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.