தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாஜகவுக்கு 50 தொகுதி, விஜய்க்கு 50 தொகுதி என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த கேப்டன் விஜயகாந்த், நடிகர் கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்து, அவர்கள் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், மிகப்பெரிய தோல்வியைத்தான் சந்தித்தனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட மாட்டார் என்று சொல்லப்பட்டது.
முதல்வர் ஆசை விஜய்க்கும், அவரது கட்சியின் தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் இருந்தாலும், முதல் தேர்தலிலே வெற்றி பெற்று முதலமைச்சராவது என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரை எடுபடாது என்பதை விஜய் நன்றாக புரிந்து கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போதைக்கு அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறி வருகிறார்.
ஆனால், கடைசி நேரத்தில் தமிழக மக்களின் நலனுக்காக அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய் இணைவார் என்றே பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தவெகவுக்கு 50 தொகுதிகள், பாஜகவுக்கு 50 தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவுக்கு வழங்கப்படும் 50 தொகுதிகளில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட சிலர் சில தொகுதிகளை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், மீதமுள்ள 134 தொகுதிகளில் தேமுதிக, பாமகவுக்கு கொடுத்துவிட்டு, அதிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பார்த்தால், 80 முதல் 90 தொகுதிகளில் தான் அதிமுக போட்டியிடும். அதேபோல, எந்த கூட்டணி வெற்றி பெற்றாலும், இனி தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி கூட்டணி ஆட்சி தான் என்றும் கூறப்பட்டு வருகிறது.