நடிகர் விஜய், தான் முழுமையாக அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்ததில் இருந்து அவரது ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. அவர் தற்போது நடித்து வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்க உள்ளார்.
விஜய் நடத்திய இரண்டு மாநில மாநாடுகளிலும், தனது அரசியல் எதிரிகள் திமுக மற்றும் பாஜக என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். அவரது கட்சி வரும் தேர்தலில் 8 முதல் 12 சதவீதம் வரை வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது மாநாடு, விஜய் போட்டியிட இருக்கும் தொகுதியிலேயே நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், தனது அரசியல் நகர்வுகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், ஒரு புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே இருக்கும் சேனல் ஒன்றை வாங்குவது எளிது என்பதால், விஜயகாந்தின் ‘கேப்டன் டிவி’யை வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இது சாத்தியமில்லாத பட்சத்தில், வேறு ஒரு சேனலை வாங்கி, அதற்கு ‘தளபதி’ எனப் பெயரிடவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதுதான் தற்போது பலரின் கேள்வியாக இருக்கிறது. அவர் விரைவில் தனது தொகுதியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நெல்லை அல்லது தூத்துக்குடியில் அவர் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More : விஜய்யை பார்க்க சென்ற ரசிகர் மர்ம மரணம்..!! வீட்டிற்கு சடலமாக வந்த தம்பி..!! திடுக்கிட வைத்த அண்ணன்..!!