நேற்று முன் தினம் மாலை ஜப்பான் ஏர்லைன்ஸ் போயிங் ட்ரீம்லைனர் 737 விமானம் திடீரென 26,000 அடி உயரத்தில் நடுவானில் கீழே விழப்போனதால், அதிலிருந்த பயணிகள் பீதியடைந்தனர். இதனால் பயந்துபோன பயணிகள் ஆக்ஸிஜன் முகமூடிகளை அணிந்துகொண்டனர்.. இதுவே தங்களின் இறுதி தருணங்களாக இருக்கலாம் என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.
சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்திலிருந்து டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்திற்குப் பயணித்த JL8696 விமானம், புறப்பட்ட நிமிடங்களிலேயே கடுமையான இயந்திர கோளாறை சந்தித்தது. இதனால் அந்த விமானம் 26,000 அடியிலிருந்து 10,000 அடிக்கு மேல் கீழே விழுந்தது. கேப்டன் உடனடியாக அவசரநிலையை அறிவித்து, ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தை திருப்பிவிட்டார், அங்கு உள்ளூர் நேரப்படி இரவு 8:50 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது. 191 பயணிகளும் பணியாளர்களும் காயமின்றி தரையிறங்கினர்.
பீதியில் ‘விடைபெறும் கடிதங்கள்’ எழுதிய பயணிகள்
விமானத்தின் அழுத்த அமைப்பு இறங்கும் போது அவசர எச்சரிக்கையை ஏற்படுத்தியது. சில நொடிகளில், ஆக்ஸிஜன் முகமூடிகள் கூரையிலிருந்து கீழே விழுந்தன, தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் பயத்தில் விழித்துக் கொண்டனர்.. இதனால் விமானத்தில் பயணிகளிடையே பயம், குழப்பம் ஏற்பட்டது.
இந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் பேசிய போது “ நான் ஒரு மந்தமான சத்தத்தைக் கேட்டேன், மேலும் ஆக்ஸிஜன் முகமூடி சில நொடிகளில் கழன்று விழுந்தது. விமானப் பணிப்பெண் அழுது ஆக்ஸிஜன் முகமூடியை அணியுமாறு கத்தினார்.. விமானத்தில் ஒரு செயலிழப்பு இருப்பதாகக் கூறினார்,” என்று தெரிவித்தார்.
பயணிகள் தாங்கள் உயிர் பிழைக்க மாட்டோம் என்று பயந்து உயில்கள், அவர்களின் நிதி விவரங்கள் மற்றும் விடைபெறும் கடிதங்களை எழுதிக் கொண்டிருந்ததாக மற்றொரு பயணி கூறினார். கேபின் அழுத்தத்தில் ஏற்பட்ட விரைவான மாற்றம் காரணமாக பலருக்கும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது., சிலர் மயக்கமடைந்துவிடுவார்கள் என்று பயந்தனர்.
ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு ¥15,000 (தோராயமாக $93) மற்றும் இரவு தங்குமிட வசதியை வழங்கியது. எனினும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.
கேள்விக்குள்ளாகும் போயிங் விமானங்களின் பாதுகாப்பு
அகமதாபாத்தில் போயிங் ட்ரீம்லைனர் 787 விமானம் விபத்துக்குள்ளான சில வாரங்களுக்குப் பிறகு இந்த பயங்கரமான நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இந்தியாவை உலுக்கிய இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். தற்போது இந்த சம்பவம் போயிங் விமான நிறுவனத்தின் பாதுகாப்பு பதிவு குறித்த கவலைகளை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.
போயிங் விமானத்தின் மீதான அதிகரித்து வரும் ஆய்வுக்கு மத்தியில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் அகமதாபாத்தில் நடந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விபத்துக்குப் பிறகும், கடந்த வாரம் வியட்நாமில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தில் மற்றொரு ட்ரீம்லைனர் மோதியது. தற்போது மற்றொரு போயிங் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் விமானத்தில் ஒரு கதவுப் பலகை நடுவானில் பறந்து சென்றது, இது போயிங் நிறுவனத்தின் தரக் கட்டுப்பாடு குறித்து மேலும் கவலைகளை எழுப்பியது.
Read More : சொந்த நாட்டு ராணுவ தளபதியை விமர்சித்த ஆடியோ லீக்!. தாய்லாந்து பிரதமர் அதிரடி சஸ்பெண்ட்!.