இன்று டொரோண்டோவில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு (AI188) இன்று வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கை வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், விமானம் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை நேரத்தில் அந்த விமானத்தில் குண்டு இருப்பதாக டெல்லி காவல்துறைக்கு ஒரு செய்தி வந்தது. இதையடுத்து, டெல்லி விமான நிலையத்தின் குண்டு மிரட்டல் மதிப்பீட்டு குழு (Bomb Threat Assessment Committee – BTAC) செயல்படுத்தப்பட்டது. விமானத்தின் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதிகாரிகள் அந்த மிரட்டலை புரளி என்று தெரிவித்தனர்.
ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் பேசிய போது “ டொரோண்டோவிலிருந்து டெல்லி வருகை வழியில் ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை பெறப்பட்டது. எந்தவிதமான தவறான சம்பவமும் நடைபெறவில்லை. பயணிகள் மற்றும் குழுவினரின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது.
விமான குழுவினர் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் கடைப்பிடித்தனர். பயணிகளின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முதன்மை முன்னுரிமை. விமானம் தற்போது டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதுடன், அதிகாரிகள் நடைமுறைப்படி முழுமையான பாதுகாப்பு சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்,” என்று தெரிவித்தார்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கைக்கு பின், அனைத்து பயணிகளும் மற்றும் குழுவினரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று ஏர் இந்தியா பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். விமானம் மாலை 3.40 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
மும்பை–வாரணாசி விமானம் அவசரமாக தரையிறங்கியது
இதனிடையே நேற்று மும்பையிலிருந்து வாராணாசிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கை பெற்றதால் அவசரமாக லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர், அந்த விமானம் பாதுகாப்பு நடவடிக்கையாக தனி பகுதியில் நிறுத்தப்பட்டது.
5 விமான நிலையங்களில் அலர்ட்
அன்றைய தினமே, இண்டிகோ விமான சேவைக்கும் குண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த மிரட்டலில், இந்தியாவின் ஐந்து முக்கிய விமான நிலையங்கள் குறிவைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, டெல்லி, மும்பை, சென்னை, திருவனந்தபுரம், மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. விமானப் பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்து நிலையங்களிலும் கூடுதல் சோதனைகள் மற்றும் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் இந்த குண்டு மிரட்டல் சம்பவத்துக்கான விசாரணையை தொடங்கியுள்ளனர், ஆனால் இதுவரை அந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியவர் யார் அல்லது எங்கிருந்து அனுப்பப்பட்டது என்ற விவரம் தெளிவாக வெளிவரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
Read More : டெல்லி கார் குண்டுவெடிப்பு: மற்றொரு மருத்துவர் முகமது ஆரிஃப் கைது! யார் இவர்? பகீர் பின்னணி!


