சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிறு கிழமை என்பதால் குறைவான ஊழியர்கள் மட்டும் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
4 பேர் படுகாயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த வெடி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துச் சிதறுவதால் ஆலைக்கு அருகே நெருங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பட்டாசுகள் வெடிப்பது முழுமையாக நின்றபிறகே, ஆலைக்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா? விதிகளை மீறி பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்றதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் குறித்து போலீஸார் விசாரணையில் தெரியவரும்.
ஜூலை மாதம் தொடங்கியது முதல் சாத்தூர் பகுதியில் நடந்த இரண்டாவது வெடி விபத்து இதுவாகும். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 1-ம் தேதி காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து நிகழும் பட்டாசு விபத்து பணியாற்றும் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..? பரவிய தகவல்.. TN Fact check unit விளக்கம்!