மதுரை சோழவந்தான் அருகே உள்ள அமைச்சியாபுரம் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மலம் கலந்து இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களாக இந்த குடிநீரை குடித்தவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற உடல் பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.
கிராம மக்கள் தெரிவித்ததன் படி, புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி விநியோகிக்கப்பட்டது, ஆனால் அங்கிருந்து வரும் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாகவும், உடல் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய்கள் உதவியுடன் குடிநீர் தொட்டியில் சோதனை செய்தனர்.
உடனடியாக தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்தனர். குடிநீர் தொட்டியின் ஆபரேட்டர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, குடிநீர் தொட்டி கிருமிநாசினி சுத்தம் செய்யப்பட்டது. ஆனால் கிராம மக்கள், துர்நாற்றம் இன்னும் இருக்கிறது, எனவே தண்ணீரை பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் மேல்நிலை தொட்டியை ஆய்வு செய்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே 14 வயது சிறுவன் தவறுதலாக, விளையாட்டாக தொட்டியில் மலத்தை கலந்துள்ளதாகவும், சிறுவனிடம் காவல்துறை விசாரணை நடத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.