சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம், தனது நிர்வாக கட்டமைப்பை அதிரடியாக மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும் (Streamline), தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும் சுமார் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜனவரி 27-ஆம் தேதி முதல் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 ஆண்டுகால அமேசான் வரலாற்றில் இல்லாத வகையில், சுமார் 30,000 கார்ப்பரேட் பணியிடங்களை ரத்து செய்ய அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் சுமார் 27,000 ஊழியர்களையும், 2025 அக்டோபரில் 14,000 ஊழியர்களையும் அந்நிறுவனம் வீட்டுக்கு அனுப்பியது. அந்த வரிசையில், தற்போது 14,000 முதல் 16,000 ஊழியர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ள இந்த இரண்டாவது பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை, மென்பொருள் பொறியாளர்கள் (Software Engineers) மற்றும் உயர் அதிகாரிகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக அமேசான் வெப் சர்வீசஸ் (AWS), பிரைம் வீடியோ மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை (HR) ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் ‘வெள்ளை காலர்’ பணியாளர்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இந்த அதிரடி முடிவிற்குச் செயற்கை நுண்ணறிவு (AI) காரணம் அல்ல என்று அமேசான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. நிறுவனத்திற்குள் நிலவும் அதிகப்படியான ‘அதிகாரத்துவத்தை’ (Bureaucracy) ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி ஜாஸி, “அதிகப்படியான நிர்வாக அடுக்குகளைக் குறைப்பதன் மூலம், ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தைப் போன்ற வேகத்துடனும், சுறுசுறுப்புடனும் அமேசான் இயங்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாக ரீதியான இந்த மாற்றங்கள் ஒருபுறம் அவசியமானதாக கருதப்பட்டாலும், உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அமேசானின் இந்த தொடர் ஆட்குறைப்பு நடவடிக்கை, உலகளாவிய தொழில்நுட்ப வேலைவாய்ப்பு சந்தையில் ஒருவிதமான மந்தநிலை அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : இந்த 5 ரூபாய் நோட்டு இருந்தா நீங்க தான் கோடீஸ்வரர்..!! அரிய நோட்டுகளுக்கு சந்தையில் திடீர் கிராக்கி..!!



