இமாச்சலப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதைத் தொடர்ந்து டிசம்பர் 26 அன்று உயிரிழந்தார். இது தொடர்பாக, ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று மாணவிகள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று பேர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
உயிரிழந்தவர் அந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவி ஆவார். செப்டம்பர் 18 அன்று, கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் அவரைத் தாக்கி மிரட்டியதாகவும், இதனால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த மாணவி டிசம்பர் 26 அன்று லூதியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வியாழக்கிழமை அன்று இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உயிரிழந்த மாணவியின் தந்தை தனது புகாரில், செப்டம்பர் 18, 2025 அன்று தனது மகளை ஹர்ஷிதா, ஆக்ருதி மற்றும் கோமோலிகா ஆகிய மூன்று மூத்த மாணவிகள் தாக்கியதாகவும், அதே நேரத்தில் கல்லூரிப் பேராசிரியர் அசோக் குமார் அவரிடம் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல் மற்றும் துன்புறுத்தல் காரணமாக, அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, தனது மகளுக்கு கடுமையான மன அழுத்தம் மற்றும் பயம் ஏற்பட்டதாகவும், இதனால் அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்ததாகவும் உயிரிழந்த பெண்ணின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
தனது மகள் அதிர்ச்சிக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், முன்னதாக புகார் அளிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
தொடரும் விசாரணை
பிஎன்எஸ் சட்டத்தின் 75 (பாலியல் துன்புறுத்தல்), 115(2) (தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்), 3(5) (பொது நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழும், இமாச்சலப் பிரதேச கல்வி நிறுவனங்கள் (ராகிங் தடை) சட்டம் 2009-இன் பிரிவு 3-இன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய காங்ரா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அசோக் ரத்தன், அனைத்துக் குற்றச்சாட்டுகளும் முழுமையாக விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். மருத்துவப் பதிவுகள், காணொளி ஆதாரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் வாக்குமூலங்களும் ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மாணவி இறப்பதற்கு முன்பு பதிவு செய்ததாகக் கூறப்படும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த வழக்கு வேகம் பெற்றது. அந்தக் காணொளியில், பாதிக்கப்பட்ட மாணவி, பேராசிரியரின் நடத்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் மீது அநாகரிகமான செயல்கள், மனரீதியான துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
முதலமைச்சரின் சங்கல்ப் சேவா உதவி எண் மூலம் ஆரம்பத்தில் ஒரு புகார் பெறப்பட்டதாகவும், ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அந்த மாணவி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அப்போது அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய முடியவில்லை. பின்னர், காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில், உயிரிழந்த மாணவி 2024-ஆம் ஆண்டில் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. அவர் சில மாணவர்களால் ராகிங்கிற்கு ஆளானதாகவும், தனது பி.ஏ. முதலாம் ஆண்டு தேர்வில் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்பிறகு, ஜூலை 2025-ல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அவர் கல்லூரிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். ஆகஸ்ட் 21, 2025 அன்று அவரது பெயர் கல்லூரிப் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் அவர் மீண்டும் சேர்க்கை கோரி கல்லூரிக்குச் சென்றதாகவும், அப்போது மறுமதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இரண்டாம் ஆண்டில் சேர்க்கப்படுவார் என்றும், தவறினால் மீண்டும் முதலாம் ஆண்டில் சேர வேண்டும் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது…
இதனிடையே, குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். சில ஆசிரியர்கள் அந்தப் பேராசிரியருக்கு ஆதரவாக வந்துள்ளனர். அந்த மாணவி முந்தைய கல்வி அமர்வில் தன்னிடம் படித்ததாகவும், தற்போதைய அமர்வில் அவர் தனது மாணவி அல்ல என்றும் அவர் கூறினார்.



