இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரை தாண்டி விற்பனையாகிறது.. இந்த சூழலில் ஷெல் இந்தியா (Shell India) நிறுவனம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
ஷெல் நிறுவனம் தனது பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.41 உயர்த்தியுள்ளது. சாதாரண வகை பெட்ரோல் இப்போது ரூ. 119.85-க்கும், ‘பவர்’ (Power) வகை பெட்ரோல் ரூ. 129.85-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலையை அந்நிறுவனம் லிட்டருக்கு ரூ. 25.01 உயர்த்தியுள்ளது. சாதாரண வகை டீசல் இப்போது ரூ. 123.52-க்கும், பிரீமியம் வகை டீசல் ரூ. 133.52-க்கும் கிடைக்கிறது.
மார்ச் 22 அன்று, நயாரா எனர்ஜி (Nayara Energy) நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3-ம் உயர்த்தியது. இந்தியாவில் உள்ள மொத்தம் 1,02,075 பெட்ரோல் நிலையங்களில் 6,967 நிலையங்களை இயக்கி வரும் இந்நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் விற்பனையாளராகத் திகழ்கிறது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) போன்ற பொதுத்துறை எரிபொருள் விற்பனையாளர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித உயர்வையும் அறிவிக்கவில்லை.
ATF (விமான எரிபொருள்) விலை உயர்வு
இதனிடையே, கச்சா எண்ணெய் விலை உயர்வு விமான எரிபொருள் (ATF) விலையையும் பாதித்துள்ளது. இன்று விமான எரிபொருளின் விலை இருமடங்கிற்கும் மேலாக உயர்ந்து, ஒரு கிலோலிட்டருக்கு ரூ. 2.07 லட்சம் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கான எல்பிஜி (LPG) சிலிண்டர் விலை ரூ. 195.50 உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுத்துறை எரிபொருள் விற்பனையாளர்கள் வெளியிட்ட தகவலின்படி, டெல்லியில் விமான எரிபொருள் விலை ஒரு கிலோலிட்டருக்கு ரூ. 1,10,703.08 (அதாவது 114.5 சதவீதம்) உயர்த்தப்பட்டு, ரூ. 2,07,341.22-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் PNG விநியோகம் தீவிரம்
இதனிடையே, எல்பிஜி (LPG) விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளைச் சமாளிக்கும் முயற்சியாக, மார்ச் மாதத்தில் 3.1 லட்சத்திற்கும் அதிகமான புதிய குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகள் நிறுவப்பட்டன; மேலும் 2.7 லட்சம் புதிய இணைப்புகளுக்கான அனுமதிகளும் வழங்கப்பட்டன.
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதன் காரணமாக விநியோகத்தில் ஏற்பட்ட தடைகளுக்கு மத்தியில், தூய்மையான எரிபொருள் விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான தீவிரப் பிரச்சாரத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர்ச் சூழல், எல்பிஜி (LPG) கேஸ் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களை வலியுறுத்தி வருகிறது.. வீட்டு உபயோகத்திற்கு எல்.பி.ஜி (LPG) சிலிண்டர்களை விட இதுவே அதிக வசதியானது எனக் கருதப்படுகிறது, ஏனெனில் எரிவாயுவை மீண்டும் முன்பதிவு செய்யும் சிரமமின்றி, குழாய் வழியாக நேரடியாகவே வீட்டிற்கு இது விநியோகிக்கப்படுகிறது.



