தமிழக அரசியல் களம் தற்போது கூட்டணி மற்றும் கட்சித் தாவல் படலங்களால் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் மூத்த பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், பாஜகவில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களை அதிர வைத்துள்ளது.
பாஜகவின் வளர்ச்சிக்கு தமிழகத்தில் நீண்டகாலமாகப் பங்காற்றிய பொன். ராதாகிருஷ்ணன், சமீபகாலமாக டெல்லி மேலிடத்தால் புறக்கணிக்கப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மனக்குறை நிலவி வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட அவர் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக பாஜக சார்பில் டெல்லிக்கு அனுப்பப்பட்ட உத்தேச வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.
அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மற்றும் சமீபத்தில் கட்சியில் இணைந்த விஜயதாரணி ஆகியோருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தனக்கு அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் அவர் இருப்பதாக தெரிகிறது. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, ஏற்கனவே தவெக-வில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பொன். ராதாகிருஷ்ணனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஒருவேளை தொகுதி விவகாரத்தில் பாஜக தலைமை சமாதானம் செய்யத் தவறினால், பொன். ராதாகிருஷ்ணன் தவெக-வில் இணைவது உறுதியென தெரிகிறது. அவ்வாறு இணையும் பட்சத்தில், தவெக கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ள டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஆண்டிப்பட்டி தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்யக்கூடும் என்ற புதிய தகவலும் வெளியாகியுள்ளது.
Read More : மக்களே இன்றே கடைசி..!! தவறினால் பொங்கல் பரிசுத் தொகை கிடைக்காது..!! வெளியான ஷாக்கிங் அறிவிப்பு..!!



