சிவகங்கை லாக் அப் மரண வழக்கில், அஜித் மீது புகார் அளித்த நிகிதா தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த வழக்கில் 6 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட நீதிபதி இன்று தனது விசாரணையை தொடங்கினார்.
நகை திருட்டுப் போனதாக கூறி நிகிதா என்ற பெண் புகாரளித்ததன் பேரில் தான் காவல்துறையினர் அஜித்தை விசாரணை அழைத்து விசாரித்துள்ளனர். ஒரு எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யாமல் தான் விசாரணை என்ற பெயரில் மிகப்பெரிய கொடூரத்தை காவல்துறையினர் அரங்கேற்றி உள்ளனர். இந்த விசாரணையில் அஜித் நகையை திருடவில்லை என்று ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், நன்றாக அடித்து உண்மையை வாங்குங்கள் என்ற ஒரு உயரதிகாரி உத்தரவின் பேரில் தான் போலீசார் அஜித்தை கடுமையாக தாக்கி உள்ளனர். இதுகுறித்து நேற்று நீதிமன்றமும் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்து தமிழக அரசை சாடியது.. இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து உயரதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் திருப்புவனம் அருகே காவல்துறையின் விசாரணையில் உயிரிழந்த அஜித்தின் வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.. அதாவது அஜித் மீது திருட்டு புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு உள்ளது.. வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக 2011-ம் ஆண்டு நிகிதா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது.. இதுதொடர்பான அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
2010-ல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்று நிகிதா மோசடி செய்துள்ளதாக எஃப்.ஐ.ஆர் பதிவாகி உள்ளது. பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி கேட்ட போது நிகிதா குடும்பத்தினர் மிரட்டியதும் தற்போது தெரியவந்துள்ளது. நிகிதா குடும்பம் ரூ.16 லட்சம் வரை மோசடி செய்து, தலைமறைவானதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக நிகிதா மோசடி செய்தார் என்று மதுரையை சேர்ந்த ராஜாங்கம் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் தொடர்புடையவர்களை தெரியும் என்று கூறி ஏமாற்றினார்.. மதுரை, ராமநாதபுரம், சென்னை என பல இடங்களில் பல லட்சங்களை நிகிதா தரப்பினர் மோசடி செய்தனர். நிதிதாவின் குடும்பத்தினர் எங்களை திட்டமிட்டு ஏமாற்றினர். காவல்துறையில் புகாரளித்தும் விசாரிக்கவில்லை.. ஏழ்மைக்குடும்பம் என்பதால் வழக்கு தொடரவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நிகிதா தனது தாயுடன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை திருமங்கலத்தில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு நிகிதா தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிகிதா மீது அக்கம்பக்கத்தினருக்கு நல்லவிதமான கருத்துகள் இல்லை என்றும் கூறப்படுகிறது..
இந்த சூழலில் அஜித் மரண வழக்கில் பல கேள்விகள் எழுந்துள்ளன. பண மோசடி புகாரில் தொடர்புடைய நிகிதாவுக்காக தனிப்படை போலீசார் விரைந்தது ஏன்? எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யாமல் அடித்து துன்புறுத்த என்ன காரணம்? நகை காணாமல் போனதாக நிகிதா கூறிய புகார் உண்மை தானா? 10 சவரன் நகைக்காக தனிப்படை போலீசார் முர்க்கத்தனமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? திருப்புவனம் காவல் நிலைய போலீசார் இருக்கும் போது, தனிப்படை போலீசார் எப்படி வந்தனர்? தனிப்படை போலீசாரை வரவழைக்க கட்டளையிட்ட உயர் அதிகாரி யார்? நிகிதா கூறிய புகாருக்காக சீருடை இல்லாமல் தனிப்படை போலீசார் விரைந்து வந்தது எப்படி? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.. இதற்கான பதில் கிடைத்தால் தான் அஜித் ஏன் கொல்லப்பட்டார் என்ற காரணமும் தெரியவரும்..