தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற விவாதம் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. பல்வேறு தொகுதிகளின் பெயர்கள் அடிபட்டாலும், விக்கிரவாண்டி தொகுதியே அவரது முதல் தேர்வாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விக்கிரவாண்டியை தேர்வு செய்வது ஏன்..?
தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த வி.சாலை மாநாடு நடைபெற்ற இடமே விக்கிரவாண்டி என்பதுதான் இதற்கு முதன்மையாக காரணமாக கூறப்படுகிறது. தவெகவின் முதல் மாநாட்டின் அடையாளமாக அங்கு நிறுவப்பட்டுள்ள 100 அடி உயரக் கொடிக்கம்பமும், கல்வெட்டும் கட்சித் தொண்டர்களுக்கு ஒரு புனித தலமாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். செண்டிமெண்ட் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மாநாடு தந்த எழுச்சியை தேர்தல் களத்திலும் அறுவடை செய்ய விஜய் விரும்புவதாக கூறப்படுகிறது.
மேலும், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த தொகுதி, மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் விரைவாகப் பயணம் செய்ய ஏதுவான அமைப்பை கொண்டிருப்பது அவரது தேர்தல் பிரசார திட்டங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும். விக்கிரவாண்டி ஒருபுறம் இருக்க, ஆங்கில எழுத்தான ‘V’ (Vijay / Victory) என்பதில் தொடங்கும் வேளச்சேரி (Velachery) மற்றும் விருகம்பாக்கம் (Virugambakkam) ஆகிய தொகுதிகளையும் தவெக தலைமை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இருப்பினும், 100-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை கொண்ட கிராமப்புறப் பின்னணி கொண்ட விக்கிரவாண்டியை தேர்வு செய்வதன் மூலம், தான் வெறும் நகர்ப்புற நாயகன் மட்டுமல்ல, சாமானிய மக்களின் தலைவன் என்பதையும் நிரூபிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இது கட்சியின் அடித்தளத்தை ஊரகப் பகுதிகளில் வலுப்படுத்த உதவும் என அவரது ஆலோசகர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், கட்சியின் முதல்வர் வேட்பாளரான விஜய் விக்கிரவாண்டியில் போட்டியிட்டால் அது ஒட்டுமொத்த தொண்டர்களிடையே மாபெரும் உற்சாக அலைகளை உருவாக்கும். தற்போது பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் மற்றும் வேட்பாளர் நேர்காணல்கள் ரகசியமாக நடந்து வரும் நிலையில், தேர்தலுக்கு முன்னதாக முறைப்படி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



