ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜா நகரில் குடும்ப வன்முறை காரணமாக இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கோழிவிலா பகுதியைச் சேர்ந்த அதுல்யா (வயது 30) என்பவர், ஷார்ஜாவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்கு முன்னதாக, ஷார்ஜாவில் மற்றொரு இந்திய பெண் தற்கொலை செய்த சம்பவம் விசாரனையில் இருக்க, தற்போது இந்த இரண்டாவது தற்கொலை சம்பவம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய குடியிருப்பாளர்களிடையே கவலை உருவாகியுள்ளது.
அதுல்யா, 2013ஆம் ஆண்டு சதீஷ் என்றவரை திருமணம் செய்து கொண்டார். சதீஷ், துபாயில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். திருமணத்திற்குப் பின் இருவரும் ஷார்ஜாவில் இணைந்து வசித்து வந்தனர். எனினும், மது பழக்கத்திற்கு அடிமையான சதீஷ், அடிக்கடி அதுல்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, உடல் ரீதியாகவும் மனதளவிலும் சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.
கணவரின் சித்திரவதையை வீடியோவாக பதிவு செய்த அதுல்யா, தன்னுடைய சகோதரிக்கு அனுப்பி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் சதீஷ், நாற்காலி கொண்டு அதுல்யாவை அடிக்கும் காட்சிகள் உள்ளிட்ட பல தீவிர காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, அதுல்யாவின் குடும்பத்தினர், UAE போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அதுல்யாவின் மரணத்துக்குப் பின்னால் துன்புறுத்தல், குடும்ப வன்முறை, உடல்தாக்குதல் போன்ற காரணங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சதீஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப வன்முறை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்.. ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!!