கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.. இதனிடையே கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்தார்..
தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.. இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர் மகாதேவன் முஹம்மது ஷபிக் கொண்ட இரு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட வேட்பாளருக்கு 10 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு தேவை, ஆனால் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு இல்லை என்று அதிமுக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. சட்டமன்றத்திலும் ஓபிஎஸ் இருக்கையை மாற்றக்கோரி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவித்தனர்..
எங்களது தரப்புக்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இல்லை என எப்படி கூறுவீர்கள் என்று ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.. இடைக்கால நிவாரனம் வழங்கப்பட்டிருந்தால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும்… என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து இந்த மேல்முறையீடு வழக்கில் இறுதி விசாரணைக்கு தயார் என அனைத்து தரப்பும் ஒப்புதல் அளித்தனர்.. ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்..