இந்த ஆண்டுக்கான ‘டெட்’ தகுதித் தேர்வு நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் உடனடியாக தொடங்கியது.
தமிழகத்தில் பதவி உயர்வுக்கும் டெட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், டெட் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என பணியில் உள்ள ஆசிரியர்களும், அரசு பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில, டெட் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தேசித்து அதற்கான அறிவிப்பை டிஆர்பி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் டெட் தேர்வுக்கான கல்வித்தகுதி மற்றும் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வரை மாலை 5 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வு அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.