பகல் முழுவதும் உழைத்தபின், இரவில் குளித்துவிட்டுப் படுக்கைக்குச் செல்லும் பழக்கம் பலரிடம் உண்டு. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இரவு குளியலில் நாம் பயன்படுத்தும் நீரின் வெப்பநிலை மிக முக்கியமானது. குளிர்ந்த நீரைத் தவிர்த்து, வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கும், ஆழ்ந்த தூக்கத்திற்கும் சிறந்தது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உங்கள் உடலில் ஏற்பட்ட அசதி, மனச் சோர்வு ஆகியவற்றைப் போக்கி, ஒரே நொடியில் புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு இயற்கை வைத்தியமாகும்.
நாள் முழுவதும் கடினமாக உழைத்த பிறகு, உடல் சோர்வடைவதுடன், மன அழுத்தத்தின் அளவும் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய பிறகு, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மன அழுத்தத்தை கணிசமாக குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், கணினி மற்றும் மடிக்கணினியில் நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும் கழுத்து வலி, முதுகு வலி மற்றும் தலைவலி போன்ற உடல் வலிகளில் இருந்து விடுபடவும் வெந்நீர் குளியல் உதவுகிறது. சுறுசுறுப்பு, புத்துணர்ச்சி ஆகியவை அதிகரிப்பதால், சோம்பேறித்தனம் நீங்கி அடுத்த வேலையை சுறுசுறுப்புடன் செய்யத் தூண்டும்.
நன்றாக ஓய்வெடுக்க விரும்பினால் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது சிறந்த பழக்கம் என்றாலும், நீரில் அதிக சூடு இல்லாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம். தண்ணீர் அளவுக்கு அதிகமாக சூடாக இருந்தால், அது சருமம் மற்றும் முடிக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். மிகச் சூடான நீரில் குளிப்பதால் சருமம் கரடுமுரடாகி, வறண்டு, பளபளப்பை இழந்து மந்தமாகிவிடும். அதேபோல, முடியின் பளபளப்பு குறைவதுடன், வேர்கள் பலவீனமடைந்து முடி உதிர்வுப் பிரச்னைகளும் அதிகரிக்கக்கூடும். எனவே, மிதமான வெதுவெதுப்பான நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
குளிர்ந்த நீரின் ஆபத்து :
இரவில் குளிக்கும்போது குளிர்ந்த நீரைப் பயன்படுத்துவது பல சிக்கல்களை ஏற்படுத்தும். முக்கியமாக, எளிதில் சளி பிடிக்கும் தன்மை கொண்டவர்களுக்கு குளிர் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்பட இது முக்கியக் காரணமாகிவிடும். குளிர்ந்த நீர் குளியலுக்குப் பிறகு, தலைமுடியை நன்கு உலர வைப்பதற்கு முன் நேரடியாக மின்விசிறிக்கு கீழே அல்லது ஏசி அறையில் அமர்ந்திருக்கக் கூடாது. இதுவும் சளி, இருமல் மற்றும் தும்மல் போன்ற பிரச்சனைகளை விரைவில் உண்டாக்க வழிவகுக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.



