பட்ஜெட் விலையில் தினசரி புரதச் சத்தைப் பெற முட்டை மிகச்சிறந்த உணவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமைத்த பிறகு அதன் ஓட்டை வீணாக குப்பையில் வீசுகிறோம். ஆனால், இந்த முட்டை ஓடுகளை வைத்துப் பல வீட்டு உபயோகங்களுக்கும், ஆரோக்கிய மேம்பாட்டிற்கும் பயன்படுத்த முடியும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.
ஆரோக்கியம் மற்றும் வலி நிவாரணி :
முட்டை ஓட்டின் உள் அடுக்கில் கொலாஜன், காண்ட்ராய்டின் மற்றும் குளூக்கோசமைன் போன்ற முக்கியமான சேர்மங்கள் நிறைந்துள்ளன. இவை மூட்டு ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. சுத்தம் செய்த முட்டை ஓடுகளை ஒரு பாட்டிலில் போட்டு, ஆப்பிள் சைடர் வினிகரில் மூழ்கும் வரை ஊற வைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து, வினிகரில் உள்ள அமிலம் ஓடுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சியிருக்கும். இந்தச் சாற்றை வலி உள்ள முழங்கால்கள் மற்றும் முழங்கைகளில் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வீட்டை சுத்தம் செய்யும் முட்டை ஓடு :
உலர்ந்த முட்டை ஓடுகள் பாத்திரங்களில் உள்ள பிடிவாதமான கறைகளை நீக்க ஒரு சிறந்த ஸ்க்ரப்பராக செயல்படுகின்றன. ஓடுகளைப் பொடியாக அரைத்து, சோப்புத் தண்ணீருடன் கறையின் மீது தேய்த்தால், ரசாயனங்கள் இல்லாமல் அழுக்குகள் எளிதில் நீங்கும். மேலும், காபி பொடியுடன் சிறிதளவு முட்டை ஓடுப் பொடியைச் சேர்ப்பது காபியில் உள்ள அமிலத்தன்மையைக் குறைத்து, கசப்புச் சுவை இல்லாமல் மென்மையாக மாற்றும். இதற்கு ஓடுகளில் உள்ள கால்சியம் கார்பனேட் உதவுகிறது.
தாவரங்களுக்கும், பறவைகளுக்கும் உரம் :
முட்டை ஓடுகளில் உள்ள கால்சியம் போன்ற தாதுக்கள் தாவரங்கள் மற்றும் காய்கறிகள் வேகமாக வளர உதவுகின்றன. தக்காளி போன்ற செடிகளில் ஏற்படும் ‘பூ முனை அழுகல்’ போன்ற நோய்களில் இருந்து கால்சியம் அவற்றை காக்கிறது. ஓடுகளைக் கழுவி, உலர்த்திப் பொடியாக அரைத்துச் செடிகளின் வேர்களைச் சுற்றி தூவிவிடலாம். மேலும், கூடுகட்டும் பருவத்தில் உள்ள பெண் பறவைகளுக்கு அவற்றின் முட்டைகள் வலுவாக இருக்க கால்சியம் அவசியம். இதற்காக, ஓடுகளைச் சுத்தம் செய்து சூடாக்கிப் பொடியாக்கிப் பறவைத் தீவனங்களில் அல்லது முற்றத்தில் தெளிக்கலாம்.
சருமப் பொலிவிற்கான ஃபேஸ் பேக் :
அழகுப் பராமரிப்பிலும் முட்டை ஓடு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு டீஸ்பூன் முட்டை ஓடுப் பொடியுடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி, காய்ந்த பிறகு கழுவினால், இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்தைப் பொலிவாகவும் மென்மையாகவும் மாற்றும். எனவே, இனி முட்டை ஓட்டை குப்பையில் போடாமல், இது தரும் பலன்களைப் பெற முயற்சிக்கலாம்.



