தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான காலக்கெடு நெருங்கி வருவதால், பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருபுறம் கூட்டணி வியூகம், மறுபுறம் தீவிர தேர்தல் பரப்புரை என களப்பணிகளில் இறங்கியுள்ளன. திமுக மற்றும் அதிமுக இடையே மட்டுமே போட்டி என்ற நிலை மாறி, விஜய்யும் அரசியல் களத்தில் நுழைந்துள்ளதால், இம்முறை தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத பரபரப்பை எட்டியுள்ளது.
இந்தச் சூழலில், அதிமுக தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணி அமைத்து எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளதால், கட்சிக்குள் சில அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளதாகவும் பேசப்படுகிறது. இதன் வெளிப்பாடாகவே, சமீபத்தில் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்தார். இதைச் சற்றும் விரும்பாத எடப்பாடி பழனிசாமி உடனடியாக அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
செங்கோட்டையன் கிளப்பிய சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டதாக இ.பி.எஸ். நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில், தற்போது மாவட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் முன்னாள் அமைச்சர்கள் (மாஜிக்கள்) புதிய சிக்கல்களை உருவாக்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்கள் வசம் உள்ள மாவட்டங்களில் இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தாங்கள் கைக்காட்டும் நபர்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று இந்த மாஜிக்கள் எடப்பாடி பழனிசாமியிடம் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளார்களாம்.
ஆனால், வேட்பாளர் தேர்வு என்பது தன்னுடைய தனிப்பட்ட முடிவு என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தலைமைக்கும் மாவட்ட மாஜிக்களுக்கும் இடையேயான இந்த மோதல் முற்றுவதால், அதிமுகவில் மீண்டும் ஒரு புதிய உட்கட்சிப் பூகம்பம் வெடிக்குமா என்ற பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது.
Read More : அடுத்த அதிரடி..!! சபாநாயகர் அப்பாவு மகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு..!! சட்டமன்ற தேர்தலில் போட்டி..?