இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில், உடனடியாக தயாராகும் உணவுகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். குறிப்பாக, உருளைக்கிழங்கை கொண்டு செய்யப்படும் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற உணவுகள், சாதாரணக் கடைகள் முதல் ஆடம்பர உணவகங்கள் வரை எங்கும் எளிதில் கிடைக்கின்றன. இவை சுவையாக இருந்தாலும், இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவது எதிர்காலத்தில் நாம் எதிர்பார்க்காத உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
சமீபத்தில் ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுமார் 40 ஆண்டுகளாக, 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களைக் கொண்டு ஒரு விரிவான ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் தொடக்கத்தில் நீரிழிவு, இதய நோய் அல்லது புற்றுநோய் இல்லாதவர்கள் இதில் பங்கேற்றனர். ஆய்வின் முடிவில், பங்கேற்றவர்களில் சுமார் 22,300 பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, வாரத்திற்கு 3 முறை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் சாப்பிடுபவர்களுக்கு, நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 20% அதிகரிப்பது தெரியவந்துள்ளது. ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வேகவைத்த, சுட்ட அல்லது மசித்த உருளைக்கிழங்கை அதே அளவில் சாப்பிட்டவர்களுக்கு, நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஆபத்துக்கான காரணம் என்ன..?
உருளைக்கிழங்கை அதிக வெப்பநிலையில் பொரிக்கும்போது, அதன் கலோரி மற்றும் கொழுப்புச் சத்து கணிசமாக அதிகரிக்கிறது. இந்த அதிகரிப்பு ரத்த சர்க்கரை அளவைப் பாதிக்கக்கூடிய காரணியாக மாறி, நீரிழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. பொரித்த வடிவமே இந்த அபாயத்திற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸுக்கு மாற்றாக என்ன சாப்பிடலாம்..?
இந்த ஆய்வின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸுக்கு மாற்றாக எந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம் என்பதுதான். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, வாரத்திற்கு மூன்று முறை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸுக்குப் பதிலாக முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 19% வரை குறைகிறது. நீரிழிவு நோயைத் தடுப்பதற்கு முழு தானியங்களுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். அதேபோல், பொரித்த உருளைக்கிழங்கிற்குப் பதிலாக, வேகவைத்த, சுட்ட அல்லது மசித்த உருளைக்கிழங்கை உணவில் சேர்த்துக்கொள்வது பாதுகாப்பானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.