தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரவுப் பணி செய்வது தவிர்க்க முடியாததாக உள்ளது. இரவுப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், தங்கள் இயற்கையான உடல் கடிகாரத்திற்கு எதிராக செயல்படுவதால், அவர்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிகவும் சவாலானது. ஆனால், பிரபல மருத்துவர் சந்தோஷ் ஜேகப், இரவுப் பணி செய்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க வெறும் நான்கு விஷயங்களைப் பின்பற்றினால் போதும் என்று தனது சமூக வலைதளத்தில் எளிமையாக விளக்கியுள்ளார்.
1. இரவுப் பணி செய்பவர்களுக்கு இரவே பகலாகவும், பகலே இரவாகவும் மாறும். அலுவலகத்தில் வெளிச்சத்தில் பணி செய்துவிட்டு, காலை வெளிச்சத்தில் வீட்டிற்குத் திரும்பும் போது கண்களுக்குத் தவறாமல் கருப்புக் கண்ணாடி அணிந்து செல்ல வேண்டும். மேலும், வீட்டிற்குச் சென்றவுடன் அவர்கள் தூங்கும் அறையை முழுவதுமாக இருட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். ஜன்னல்கள் மற்றும் கதவுகளை அடைத்து, அறையில் எந்த வெளிச்சமும் இல்லாமல் பார்த்துக்கொண்டு, நன்கு ஆழ்ந்து உறங்கி, புத்துணர்ச்சியுடன் எழ வேண்டும்.
2. தூங்கி எழுந்தவுடன் (பகல் அல்லது மதிய வேளையில்) நன்கு கனமான உணவை சாப்பிடலாம். ஆனால், மாலை 6 முதல் 7 மணிக்குள் உங்களின் கனமான உணவுகளை (Heavy Meals) முடித்துவிடுவது நல்லது. அதற்குப் பிறகு, இரவுப் பணிக்காகக் கிளம்பும்போது, லேசான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, பழங்கள், தயிர், சாலட் வகைகள், முட்டையின் வெள்ளைப்பகுதி, கொண்டைக்கடலை, வேர்க்கடலை போன்ற புரத உணவுகள், மற்றும் சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். இது செரிமான மண்டலத்தை லேசாக வைத்திருக்க உதவும்.
3. பணி முடித்து வீடு திரும்பியவுடன் தூங்கச் செல்வதற்கு முன், சுமார் 20 முதல் 30 நிமிடங்களுக்கு மிதமான வேகத்தில் நடப்பது அல்லது லேசான ஸ்ட்ரெட்ச் பயிற்சிகளை செய்வது நல்லது. இந்தச் சிறிய செயல், உடலைத் தளர்வு படுத்தி, இரவுப் பணிக்குப் பிறகு ஆழமான தூக்கம் கிடைக்க உதவுகிறது. மேலும், தூங்கி எழும்போது உற்சாகமும் புத்துணர்ச்சியும் கிடைக்கும். அத்துடன், வெதுவெதுப்பான நீரில் குளிப்பதும் உடலை ஓய்வு நிலைக்குக் கொண்டு செல்ல மிகவும் நல்லது.
4. இரவு பணி செய்பவர்கள் ஆழ்ந்த உறக்கம் பெறுவதற்கு, தூங்கச் செல்வதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பிருந்தே காஃபி குடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். உதாரணமாக, காலை 8 மணிக்கு படுக்கைக்குச் செல்பவர்கள், நள்ளிரவு 2 மணிக்கு மேல் காஃபி குடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். காஃபியில் உள்ள கெஃபின் (Caffeine) தூக்கத்தைத் தடுக்கும் என்பதால், இந்த விதியை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
மேலே குறிப்பிட்ட 4 வழிமுறைகளைப் பின்பற்றும்போது, இரவுப் பணி செய்பவர்களின் உடல் கடிகாரம் சீராக அமைந்து, உடல் இயக்கங்கள் மேம்பட்டு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும் என்று மருத்துவர் சந்தோஷ் ஜேகப் உறுதி அளிக்கிறார்.



