திருமணமான தம்பதிகளில் பலரும் தங்களின் அடுத்தகட்ட வாழ்வியலான குழந்தைப்பேறுக்காக தீவிர முயற்சிகளை மேற்கொள்கின்றனர். பொதுவாக, மாதவிடாய் சுழற்சி சீராக இருந்தால் மட்டுமே கருத்தரிக்க முடியும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. ஆனால், ஒரு பெண்ணின் உடல் கருவுறுதலுக்கு தயாராக இருப்பதை அவரது உடல் சில நுட்பமான சிக்னல்கள் மூலம் உணர்த்தும். இந்த அறிகுறிகளை சரியாக கண்டறிந்து அந்த நாட்களில் இணையுடன் இணைவது கருப்பையில் கரு தங்குவதற்கான வாய்ப்பை பன்மடங்கு அதிகரிக்கும்.
மாதவிடாய் சுழற்சியின் இடைப்பட்ட நாட்களில் பல பெண்களுக்கு திடீரென உடலில் ஒருவித புத்துணர்ச்சியும், அதிகப்படியான ஆற்றலும் உருவாவதை உணரலாம். இது அண்டவிடுப்பின் முக்கிய அறிகுறியாகும். இந்த சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உச்சத்தில் இருப்பதால், உடல் இயற்கையாகவே கர்ப்பத்திற்குத் தயாராகிறது என்பதை இது காட்டுகிறது.
அண்டவிடுப்பு நிகழ்ந்த பிறகு, உடலின் அடிப்படை வெப்பநிலை சற்று உயர்கிறது. இதனால் இரவு நேரங்களிலோ அல்லது அதிகாலையிலோ உடல் லேசாகச் சூடாகவோ அல்லது வியர்ப்பது போன்றோ தோன்றும். வானிலை மாற்றத்தால் இது நிகழ்கிறது என்று பல பெண்கள் கடந்து செல்கின்றனர். ஆனால், இது கருத்தரிப்பதற்கான சாதகமான சூழல் உடலில் நிலவுவதை குறிக்கும் ஒரு முக்கிய மாற்றமாகும்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் கடுமையான வலியைப் போல் இல்லாமல், அடிவயிற்றின் கீழ்ப்பகுதியில் ஒரு பக்கம் மட்டும் லேசான சுருக்கு என்ற வலியோ அல்லது குத்தும் உணர்வோ ஏற்படலாம். மருத்துவ ரீதியாக இது ‘மிட்டெல்ஸ்மெர்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. கருப்பையில் இருந்து முட்டை வெளியேறும் தருணத்தில் இது நிகழும். இதை சாதாரண வயிற்று வலி அல்லது வாயுத் தொல்லை என்று கருதி புறக்கணிக்கக் கூடாது.
அண்டவிடுப்பின் போது கருப்பை வாயிலிருந்து வெளியாகும் திரவம், முட்டையின் வெள்ளைக்கருவைப் போல வழுவழுப்புடனும், நீட்சித் தன்மையுடனும் மாறும். இது விந்தணுக்கள் எளிதாகப் பயணம் செய்து முட்டையை அடைய இயற்கையாகவே உடல் செய்யும் ஏற்பாடாகும். பல பெண்கள் இதை ஏதோ தொற்று என்று தவறாக எண்ணுகின்றனர், ஆனால் இது கருவுறுதலுக்கான மிக ஆரோக்கியமான அறிகுறியாகும்.
மாதவிடாய் சரியான இடைவெளியில் வருவது மட்டுமல்லாமல், அந்த நாட்களில் வெளியேறும் இரத்தப் போக்கின் அளவும், வலியும் இயல்பாக இருப்பது அவசியம். வழக்கத்திற்கு மாறான அதிகப்படியான வலியோ அல்லது மிக குறைவான போக்கோ இல்லாமல் இருந்தால், உங்கள் ஹார்மோன் சமநிலை சீராக இருப்பதையும் அண்டவிடுப்பு முறையாக நடப்பதையும் அது உறுதிப்படுத்துகிறது.
Read More : ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம்..!! இனி பொருட்களுக்கு பதில் பணம்..!! யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா..?



