இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பரிவர்த்தனை எதுவும் இல்லாமலும் அல்லது தேவையான குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் (Minimum Balance) கடைபிடிக்காமலும் இருந்தால் அவர்களின் சேமிப்புக் கணக்குகள் முடக்கப்பட உள்ளன.
வங்கியின் தரவுகளின்படி, சில வாடிக்கையாளர்கள் தங்களின் சேமிப்புக் கணக்குகளில் நீண்ட காலமாக எந்தவிதமான பரிவர்த்தையும் மேற்கொள்ளாமல் வைத்திருப்பதோடு, அதற்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையையும் பராமரிக்கவில்லை. இதனால் வங்கியின் நிர்வாக செலவுகள் அதிகரிக்கின்றன என்றும், வாடிக்கையாளர்களின் ஒழுங்கற்ற பராமரிப்பு வங்கியின் செயல்திறனை பாதிக்கக்கூடும் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
மேலும், கணக்குகள் முடக்கப்படுவதற்கான முன்னறிவிப்பு SMS அல்லது மின்னஞ்சல் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும். வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்குகளை செயல்படுத்த விரும்பினால், வங்கிக் கிளைகள் அல்லது நெட்/மொபைல் பேங்கிங் மூலம் கே.ஒய்.சி. புதுப்பிக்க வேண்டும். இதை அடுத்த ஒரு மாதத்திற்குள் செய்ய வேண்டும் என வங்கி வலியுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை, வங்கியின் சேமிப்பு கணக்குகளை சீரமைக்கும் வகையில் மேற்கொள்ளப்படுவதாகவும், நடவடிக்கைக்கு உட்படும் கணக்குகளில் பணம் இருந்தால், அதை வாடிக்கையாளர் ஆதாரச் சான்றுகள் வழங்கும்போது திருப்பி வழங்கப்படும் எனவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. எனவே, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்குகளை சரிபார்த்து, அவற்றை செயல்படுத்துவதன் மூலம் கணக்கு முடக்கப்படுவதில் இருந்து தவிர்க்கலாம்.