தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்பு ஆகியவை தான் முதலில் நினைக்கு வரும். முந்தைய தலைமுறையினர் ஜிலேபி, லட்டு, முறுக்கு போன்ற இனிப்பு மற்றும் கார வகைகளை வீட்டிலேயே சுகாதாரமாகத் தயாரித்த காலம்போய், இன்றைய சூழலில் பெரும்பாலானோர் கடைகளையே நாடுகின்றனர்.
இந்நிலையில், பண்டிகை நாட்களை குறிவைத்து, தரமற்ற உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி பலகாரங்கள் தயாரிக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இத்தகைய ஆபத்தில் இருந்து நுகர்வோர் தங்களின் ஆரோக்கியத்தைத் தற்காத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் :
இந்த மோசடிகளைத் தடுக்க, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பலகார உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பவும் பயன்படுத்தக் கூடாது.
அனுமதிக்கப்பட்ட நிறமிகளை மட்டுமே உணவில் சேர்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உறைகளில் பலகாரங்களைப் பொட்டலமிடக் கூடாது. தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகள் தனியாகப் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
உபயோகக் காலம், மூலப்பொருட்கள் போன்ற முழு விவரங்களும் பேக்கிங்கில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். தயாரிப்பிற்குக் கண்டிப்பாகத் தூய்மையான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள் :
பொதுமக்கள் பண்டிகை காலங்களில் கடைகளில் பலகாரங்களை வாங்கும் முன் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறையில் உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டுமே பலகாரங்களை வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பு விவரங்கள், காலாவதி தேதி ஆகியவை அச்சிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், பேக்கிங் செய்யப்படாத பலகாரங்களை வாங்குவதற்கு முன், ஒரு சிறிய பகுதியைச் சுவைத்து பார்த்து வாங்கலாம். இதில் ‘சிக்கு’ வாடை, அதிக நிறமி, அல்லது சுவையில் வித்தியாசம் இருந்தால் அதனைத் தவிர்ப்பது நல்லது. உணவுப் பொருட்கள் ஈ மற்றும் எறும்பு அண்டாத வகையில் சுத்தமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதா, விற்பனையாளர்கள் கையுறை, தலையுறை அணிந்துள்ளார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.
தரமற்ற உணவுகள் குறித்துப் புகார்கள் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், Google Play Store-ல் இருந்து “tnfoodsafety consumer App” என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் என்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. தரமான பலகாரங்களை வாங்கி, ஆரோக்கியமான முறையில் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதே அதிகாரிகளின் வேண்டுகோளாகும்.
Read More : கந்த சஷ்டி விரதம்..!! முருகப் பெருமானின் அறுபடை வீடு..!! எங்கு விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்..?



