சீனாவில் ஒரு செயலி பிரபலமாகி வருகிறது. கேட்பதற்கே அதிர்ச்சியாக இருக்கும் இந்த செயலியின் பெயர் “நீங்கள் இறந்துவிட்டீர்களா?” (Are You Dead?) என்பது தான்..இதன் செயல்பாடு மிகவும் எளிமையானது. இந்த செயலியைப் பயன்படுத்தும் நபர், ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒரு பட்டனை அழுத்தி தான் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட அவசரத் தொடர்பு எண்ணுக்கு ஒரு எச்சரிக்கை அனுப்பப்படும்.
இந்த செயலி எப்படி வேலை செய்கிறது?
செயலியை பதிவிறக்கிய பிறகு, பயனர் நம்பகமான ஒருவரின் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சலை அவசரத் தொடர்பு எண்ணாக அமைக்க வேண்டும். ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் ஒரு அறிவிப்பு அனுப்பப்படும். அதை கிளிக் செய்தால் மட்டும் போதும். குறிப்பிட்ட நேரத்திற்குள் எந்தப் பதிலும் வரவில்லை என்றால், “ஏதேனும் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்” என்ற செய்தி அவசரத் தொடர்பு எண்ணுக்கு அனுப்பப்படும். இதற்கு உள்நுழைவோ அல்லது அதிக தனிப்பட்ட தகவல்களோ தேவையில்லை.
இளைஞர்கள் ஏன் இந்த செயலியை பயன்படுத்துகிறார்கள்?
சீனாவின் பெரிய நகரங்களில் தனியாக வசிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. வேலை மற்றும் படிப்பு காரணமாக அவர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு விலகி இருக்கிறார்கள். உடல்நலப் பிரச்சினைகள் அல்லது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அது பல நாட்களுக்கு யாருக்கும் தெரியாமல் போய்விடுமோ என்று பலர் அஞ்சுகிறார்கள். “யாரோ ஒருவர் என்னைக் கவனித்துக் கொள்கிறார்” என்ற பாதுகாப்பு உணர்வை இந்த செயலி அளிக்கிறது. அதனால்தான் இளம் ஊழியர்களும் மாணவர்களும் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
சமூக ஊடகங்களில் இதன் வரவேற்பு எப்படி இருக்கிறது?
சிலர் இந்த செயலியின் பெயர் மிகவும் எதிர்மறையாக இருப்பதாக விமர்சிக்கின்றனர். இது அபசகுனமானது என்றும், பெயரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், “தனியாக வசிப்பவர்களுக்கு இது அவசியம்” என்று கூறி மற்றவர்கள் இதை ஆதரிக்கின்றனர். “தனியாக இறந்துவிட்டால், அது யாருக்கும் தெரியாமல் போய்விடுமோ?” என்ற எண்ணம் தங்களை பயமுறுத்துவதாக பல பயனர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
இந்த செயலியை உருவாக்கியது யார்?
இந்த செயலியை மூன்ஸ்கேப் டெக்னாலஜிஸ் என்ற ஒரு சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. வெறும் ஆயிரம் யுவான் செலவில் உருவாக்கப்பட்ட இந்த செயலி, இப்போது கோடிக்கணக்கான மதிப்புக்கு உயர்ந்துள்ளது. சீனா மட்டுமல்லாமல், அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளிலும் இதன் பதிவிறக்கங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த செயலி நிறுவனம் எதிர்காலத்தில் முதியவர்களுக்காக பிரத்யேகமாக மற்றொரு பதிப்பைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. தனியாக வசிக்கும் முதியவர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதே இதன் நோக்கம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..
Read More : “ஈரானை விட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ வெளியேறுங்கள்..” இந்தியர்களுக்கு தூதரகம் அட்வைஸ்..!



