உடல் எடையை குறைக்க விரும்புவோர், தங்கள் டயட்டில் சுவையில்லாத உணவுகளை சாப்பிட்டுப் போராட வேண்டியதில்லை. தினமும் உடற்பயிற்சியுடன், ருசியான மற்றும் ஆரோக்கியமான உணவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பாக, சிறுதானிய வகைகளைக் கொண்டு செய்யப்படும் கஞ்சிகள், நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி, எடை இழப்பு முயற்சிக்குப் பெரிதும் துணைபுரியும்.
கோதுமை சம்பா ரவையை கொண்டு எளிதில் தயாரிக்கக் கூடிய இந்தக் கஞ்சியை, பேச்சுலர்கள் முதல் அனைவரும் சுலபமாகச் சமைக்கலாம். இது உடல் எடையைக் குறைப்பதுடன், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.
தேவையான பொருட்கள் :
கோதுமை சம்பா ரவை – 1 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
தண்ணீர் – 6 கப்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
தாளிக்க: சீரகம் – 1/2 டீஸ்பூன், பூண்டு – 6 பல் (நறுக்கியது), சின்ன வெங்காயம் – 10 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிது, உப்பு – சுவைக்கேற்ப.
சமைக்கும் முறை:
* முதலில், கோதுமை சம்பா ரவையைச் சுத்தம் செய்து, தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பாசிப்பருப்பையும் தனியாகக் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.
* அடுத்து, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* வதக்கியபின், கொத்தமல்லி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து ஒரு முறை கிளறி விடவும்.
* இப்போது, ஊற வைத்த சம்பா கோதுமை ரவை, பாசிப்பருப்பு, 6 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
* குக்கரை மூடி, 5 முதல் 6 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கினால், ஆரோக்கியமான கோதுமை ரவை கஞ்சி தயார். கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது சுடுநீர் சேர்த்து நீர்க்க செய்து பரிமாறலாம்.



