இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 0 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெறுவதற்கான நடைமுறைகளில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இனி, குழந்தைகளின் ஆதார் சேர்க்கை அவர்களின் பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது.
பிறப்புச் சான்றிதழ் இணைப்பு : புதிய செயல்முறையின் கீழ், ஒரு குழந்தைக்கு ‘பால் ஆதார்’ வழங்கப்பட்டதும், அவர்களின் பிறப்புச் சான்றிதழ் நேரடியாக UIDAI உடன் இணைக்கப்படும். இதனால், குழந்தை வளர்ந்த பிறகு மீண்டும் ஆதார் பதிவு செய்ய முடியாது. இது ஒரே நபருக்கு இரண்டு ஆதார் எண்கள் கிடைப்பதை தடுக்கும் முயற்சியாகும்.
தானியங்கி இணைப்பு: இந்த புதிய நடைமுறை அடுத்த 3 மாதங்களில் முழுமையாக அமலுக்கு வரும். பிறப்புச் சான்றிதழின் தரவுகள் தானாகவே ஆதாரில் இணைக்கப்படும். இதற்காக, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பதிவாளர் ஜெனரல் தரவுகளுடன் UIDAI ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
‘பால் ஆதார்’ என்பது பெற்றோரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஒரு 12 இலக்க எண் ஆகும். இதில் குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்படாது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஒரு பெற்றோரின் ஆதார் விவரங்களை சமர்ப்பித்து இந்த அட்டையைப் பெறலாம். இதில் பெயர், பாலினம், பிறந்த தேதி போன்ற அடிப்படை விவரங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்.
தற்போது, நாடு முழுவதும் சுமார் 45% குழந்தைகளுக்கு ‘பால் ஆதார்’ வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டமைப்பு, குழந்தைகளின் ஆதார் சேர்க்கை எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



