ஒரு குடும்பத்தில் திருமணம் ஆகும் தம்பதியினர் தனிக் குடித்தனம் சென்றால் பழைய முகவரியில் உள்ள பெயரை நீக்கி சான்றிதழ் வாங்கி அதை இணைத்து விண்ணப்பம் செய்வது நடைமுறை வழக்கமாகும். இவற்றை அதிகாரிகள் பரிசீலித்து முறையாக புது கார்டு வழங்கி வருகின்றனர். ஒரே வீட்டில் இருந்து கொண்டு தனியாக ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, தனித்தனியாக சமையல் எரிவாயு இணைப்பு இருந்தால் அதிகாரிகள் பரிசீலித்து புதிய ரேஷன் கார்டு வழங்குவார்கள்..
அதேபோல், குடும்பம் இன்றி தனியாக வசிப்பவர்களுக்கு கூட தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு பெற முடியும். திருமணமாகாமல் குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக வசிப்பவர்கள், விவாகரத்து பெற்று தனியாக வசிப்பவர்கள் உள்ளிட்டோர் தனிநபர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களின் விண்ணப்பத்தை அரசு பரிசீலித்து புதிய ரேஷன் கார்டு வழங்கும். ஆனால் அது அவ்வளவு எளிது இல்லை.. ரேஷன் கார்டு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை காட்டிலும் தனி நபர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக சில ஆவணங்கள் தேவைப்படும். அவை பின்வருமாறு:
குடும்பத்தில் யாருமில்லை சான்றிதழ்: நீங்கள் தனியாக வசிப்பதை உறுதிப்படுத்த, தாசில்தார் அலுவலகத்தில் இருந்து “No Family Certificate” பெற வேண்டும். இது உங்கள் குடும்பத்தில் யாரும் இல்லை என்பதற்கான அதிகாரப்பூர்வ சான்றாகும்.
பிரமாணப் பத்திரம் (Affidavit): நீங்கள் தனியாக வசிப்பதாக ஒரு நோட்டரி வழக்கறிஞரால் கையொப்பமிடப்பட்ட மற்றும் முத்திரையிடப்பட்ட பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணம் ரூ. 10 அல்லது ரூ. 20 மதிப்புள்ள ஸ்டாம்ப் பேப்பரில் தயார் செய்யப்பட வேண்டும். பிரமாணப் பத்திரத்தில் பின்வரும் தகவல்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
- உங்கள் பெயர், வயது, மற்றும் தந்தை அல்லது தாயின் பெயர்.
- உங்கள் தற்போதைய முழு முகவரி.
- நீங்கள் தனியாக வாழும் ஒரு தனிநபர், மற்றும் தமிழ்நாட்டில் வசிப்பவர் என்பதை உறுதிப்படுத்தும் பிரகடனம்.
- உங்கள் பெயர் வேறு எந்த குடும்ப ரேஷன் கார்டிலும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தும் சான்று.
- நீங்கள் வழங்கும் தகவல்கள் தவறாக இருந்தால், அதற்கு நீங்களே பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்ளும் அறிக்கை.
விளக்க கடிதம்: ஏன் தனியாக வசிக்கிறீர்கள் என்பதை விளக்கி ஒரு கடிதம் (Cover Letter) இணைக்க வேண்டும்.
இதுபோக ஆதார் அட்டை அல்லது வேறு ஏதேனும் முகவரி சான்று, பான் கார்டு அல்லது பிறப்புச் சான்றிதழ் போன்ற வயது சான்று. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் தேவைப்படும். தேவையான அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பத்தை ஆன்லைனில் அல்லது நேரடியாக அருகிலுள்ள தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால், தனிநபர் ரேஷன் கார்டு பெறுவது எளிதாகும்.