தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதால், ஏசிகளின் தேவை சந்தையில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. புதிய ஏசி வாங்குவதற்குத் திட்டமிடும்போது, பிராண்டுகளைத் தாண்டி உங்கள் அறையின் அளவைப் பொறுத்தே ஏசியை தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுவாக, 100 முதல் 120 சதுர அடி கொண்ட சிறிய அறைக்கு 1 டன் ஏசி போதுமானது. அதுவே 150 முதல் 180 சதுர அடி பரப்பளவு கொண்ட நடுத்தர அறை என்றால் 1.5 டன் ஏசியும், அதற்கு மேற்பட்ட பெரிய அறைகளுக்கு 2 டன் ஏசியும் தேவைப்படும். அறையில் எத்தனை ஜன்னல்கள் உள்ளன மற்றும் அந்த அறையின் மீது நேரடி வெயில் படுகிறதா என்பதைக் கணக்கில் கொண்டு கூடுதல் டன் அளவைத் தீர்மானிப்பது சிறந்தது.
இன்வெர்ட்டர் ஏசி மற்றும் ஸ்டார் ரேட்டிங் :
பழைய மாடல் ஏசிகளை விட ‘இன்வெர்ட்டர்’ (Inverter AC) தொழில்நுட்பம் கொண்ட ஏசிகள் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதில் கில்லாடிகள். சாதாரண ஏசிகளின் கம்ப்ரஸர் அவ்வப்போது நின்று இயங்கும். ஆனால் இன்வெர்ட்டர் ஏசிகள் அறையின் வெப்பத்திற்கு ஏற்ப வேகத்தை குறைத்துக் கொண்டு இயங்கும். இதனால் மின்சாரக் கட்டணம் பெருமளவு குறையும். அதேபோல், 3 ஸ்டார் அல்லது 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசிகளைத் தேர்ந்தெடுப்பது நீண்ட கால அடிப்படையில் உங்கள் பாக்கெட்டிற்கு லாபகரமானது. குறிப்பாக, ஏசியின் காயில் ‘காப்பர்’ (Copper Coil) கொண்டு செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்; இது குளிர்ச்சியைத் தக்கவைப்பதோடு நீண்ட காலம் உழைக்கும்.
சர்வீஸ் செய்யாமல் ஆன் செய்வது ஆபத்து :
கடந்த சில மாதங்களாக பயன்படுத்தாமல் இருந்த ஏசியை அப்படியே ஆன் செய்வது அதன் ஆயுளை குறைப்பதோடு, மின்சாரத்தையும் அதிகம் செலவழிக்கும். கோடை தொடங்கும் முன் ஏசியின் ஃபில்டர்களைச் சுத்தம் செய்வது, கம்ப்ரஸரில் உள்ள தூசுகளை நீக்குவது மற்றும் கேஸ் அளவு சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது அவசியம். ஏசி மெக்கானிக் மூலம் முறையான ‘வெட் சர்வீஸ்’ (Wet Service) செய்வதன் மூலம் குளிர்ச்சி சீராகக் கிடைப்பதோடு, மின்சாரப் பயன்பாட்டையும் 20 சதவீதம் வரை குறைக்க முடியும். மேலும், ஏசி ஓடும்போது அறையின் கதவு மற்றும் ஜன்னல்களில் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்வது குளிர்ச்சியை விரைவாக்கும்.
ஏசியை எப்போதும் 24 முதல் 26 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வைப்பதே உடல் நலத்திற்கும் மின்சார சிக்கனத்திற்கும் உகந்தது. மிக குறைந்த வெப்பநிலையில் (உதாரணமாக 16 அல்லது 18 டிகிரி) வைப்பதால் ஏசி மெஷின் அதிக அழுத்தத்துடன் இயங்கி சீக்கிரம் பழுதடைய வாய்ப்புள்ளது. அத்துடன், டைமர் வசதியைப் பயன்படுத்தி இரவு நேரங்களில் ஏசியை சில மணி நேரம் மட்டும் இயக்கி, பின் தானாக அணைந்துவிடும் படி அமைப்பது மின்சாரத்தைச் சேமிக்கும் ஒரு புத்திசாலித்தனமான நகர்வாகும். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்த கோடையைச் சில்லென்று ரசிக்கலாம்.
Read More : டாக்டரிடம் போவதை தவிர்க்க வேண்டுமா..? தூங்கி எழுந்ததும் ஒரு இளநீர் போதும்..!! இத்தனை நன்மைகளா..?



